Tamil Nadu Congress probable candidates Former IAS officer sasikanth senthil praveen chakravarty jothimani


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
தமிழ்நாடு அரசியல் களம்:
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, திமுக, காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேர்யில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை செய்தது.
தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்படாமல் இருக்க கூட்டணி கட்சிகள் அனைத்தும்  சுமூகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டு, யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பது அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், கன்னியாக்குமரி, விருதுநகர், சிவகங்கை, கரூர், திருவள்ளுர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கடலூர், நெல்லை உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
பிளான் போடும் காங்கிரஸ்:
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களாக யார் களமிறங்க உள்ளார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியலை கீழே பார்க்கலாம்.
காங்கிரஸ் பலம் வாய்ந்த கன்னியாகுமரி தொகுதியில் சிட்டிங் எம்.பி. விஜய் வசந்த் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அதேபோல, விருதுநகர், சிவகங்கை, கரூர் ஆகிய தொகுதிகளிலும் சிட்டிங் எம்பிக்களே களமிறங்குவார்கள் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அந்த வகையில், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், கரூரில் ஜோதிமணி ஆகியோர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பு தரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலைக்கு செக் வைக்கும் நோக்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை அரசியல் களத்தில் காங்கிரஸ் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

மேலும் காண

Source link