கேரளாவில் கோவில் மேல்சாந்திக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டபனை மேப்பாறை மகா விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருபவர் மதுசூதனன் (வயது 52).
20 ஆண்டுகளாக ஆன்மிக பணியில் ஈடுபடும் இவர், அடிக்கடி கேரள அரசின் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். அதேபோன்று தற்போதும் லாட்டரி வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 24-ந் தேதி பிப்டி பிப்டி லாட்டரி குலுக்கல் நடந்தது. அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டது.
இதில் முதல் பரிசான ரூ.1 கோடி, மேல்சாந்தி மதுசூதனனுக்கு விழுந்துள்ளது. 20 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்த நிலையில் திடீரென ரூ.1 கோடி விழுந்ததை அறிந்த அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதுசூதனன், தனக்கு அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்ததாக கூறியுள்ளார். சில நேரங்களில் சிறிய அளவிலான பரிசுகள் கிடைக்கும் என்றும், அதனால், லாட்டரி வாங்கும் பழக்கத்தை விட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கு ரூ. 1 கோடி விழும் என நினைக்கவில்லை என்ற மதுசூதனன், முதல் பரிசான ரூ.1 கோடி கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.