காஞ்சிபுரத்தில் வெஜ் ரைஸ் சாப்பிட ஊறுகாய் கேட்ட இளைஞரை, உணவக ஊழியர்கள் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரம் பல்லவன் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். துக்க நிகழ்ச்சிக்காக சென்ற இவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முனியாண்டி விலாஸ்க்கு சாப்பிட சென்றார்.
வெஜ் ரைஸ் ஆர்டர் கொடுத்து வாங்கி சாப்பிட்டபோது, வெஜ் ரைஸ் சரியாக இல்லை என கூறி தொட்டுக்கொள்ள ஊறுகாய் கேட்டுள்ளார்.
ஆனால், உணவக ஊழியர்களோ ஊறுகாய் தர மறுத்து, சாஸ் கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் கோபமுற்ற தனசேகர், கேட்பதை கொடுங்கள்.. இல்லையென்றால் வேண்டாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், தனசேகர் குடித்திருப்பதாகவும், போதையில் உளறுவதாக கூறி உணவக ஊழியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பணம் இல்லாமல் வந்து சாப்பிட்டுவிட்டு தகராறு செய்கிறாயா என்று ஏளனமாக பேசியதாக தெரிகிறது. அதற்கு, யாரிடம் பணம் இல்லை என, பணத்தையும், சாப்பிட்ட உணவு பொருள்களையும் தனசேகர் தூக்கி வீசி உள்ளார்.
இதனால் உணவக ஊழியர்களுக்கும் தனசேகருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. உணவக ஊழியர் ஒருவர் கரண்டியால் தாக்கியதால், தனசேகர் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், தனசேகரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருதரப்பினரையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, யாரும் புகார் அளிக்காததால் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விட்டனர்.