திமுக விசிக இடையே எந்த விரிசலும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.
அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த உள்ள நிலையில், இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசு மதுபான கடைகளை விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று முதலாவது கோரிக்கையாகவும், தேசிய அளவில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்று இரண்டாவது கோரிக்கையாகவும் முன்வைத்துள்ளதாக கூறினார்.
பேரறிஞர் அண்ணா மதுவிலக்கில் உறுதியாக இருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதை பின்பற்றி, 75 ஆம் ஆண்டு பவள விழாவை கொண்டாடும் திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
திமுகவின் கொள்கைதான் மதுவிலக்கு கொள்கை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதால், விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று உறுதி அளித்துள்ளதாக கூறினார்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை பற்றி முதலமைச்சர் ஏதும் கேட்கவில்லை என்ற திருமாவளவன், அது 1990 களில் இருந்து விசிக பேசி வரும் கருத்து என்றார். தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை இல்லை என்றும், இந்த மாநாட்டை அரசியலோடு பிணைத்து திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
விசிக திமுக இடையே எந்த விரிசலும் இல்லை என்று தெரிவித்த திருமாவளவன், மது ஒழிப்பு என்பது கூட்டணிக்கான பிரச்சனை இல்லை… மக்களுக்கான பிரச்சினை என்றார்.