கனடாவில் விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரையே 16 வயது சிறுவன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் சர்ச்சை சம்பவங்கள்:

சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.

இந்த நிலையில், கனடாவின் டொராண்டோவில் இருந்து கால்கரி நோக்கி சென்ற ஏர் கனடா விமானத்தில் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை 16 வயது சிறுவன் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தால் திட்டமிடப்படாத மாற்றுப்பாதையில் விமானம் திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக, விமானத்தில் பயணித்த பயணிகள் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "டொராண்டோவில் இருந்து கல்கரிக்கு ஏர் கனடா விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, கிராண்டே ப்ரேரி என்ற 16 வயது ஆண் பயணி ஒருவர், தன்னுடன் பயணம் செய்த குடும்ப உறுப்பினரை தாக்கியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது" என தெரிவித்தது.

விமானத்தில் குடும்ப உறுப்பினரை தாக்கிய சிறுவன்:

இது தொடர்பாக விமான நிறுவனம் தரப்பு கூறுகையில், "விமானத்தில் பயணித்த குடும்ப உறுப்பினரை 16 வயது சிறுவன் தாக்கியபோது, அவரை சக பயணிகளும் விமான குழுவினரும் தடுத்து நிறுத்தினர். விமான பயணத்தின்போது தாக்கப்பட்ட பயணி சிறிய உடல் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்கிய சிறுவன் தடுத்து நிறுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மற்றவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த சிறுவன் ஏன் தாக்கினார் என்பது குறித்தும் தெரியவில்லை" என தெரிவித்தது.

நேற்று, அமெரிக்காவில் மற்றுமொரு பரபரப்பு சம்பவம் நடந்தது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்றில் அதன் கதவு அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து, ஒரேகான் மாகாணத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பலத்த காற்றில் விமானத்தின் கதவு அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் அதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டிருந்தார்.

இதையும் படிக்க: Childrens Missing: சட்டவிரோதமான காப்பகம்! மாயமான 26 சிறுமிகள் – மீட்கப்பட்டார்களா? மத்திய பிரதேசத்தில் பகீர்!