Thiruvallur Parliamentary Constituency: திருவள்ளூர் மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். அந்த வகையில் மாநிலத்தின் முதல் தொகுதியான, திருவள்ளூர் மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாற்றை சற்றே விரிவாக அலசி ஆராயலாம்.
திருவள்ளூர் மக்களவை தொகுதி உருவான வரலாறு:
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி (Thiruvallur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் முதலாவது தொகுதி ஆகும். 1950-களிலேயே திருவள்ளூர் மக்களவை தொகுதி என ஒன்று இருந்தது. ஆனால், அதில் இருந்த சட்டமன்ற தொகுதிகள் என்பன வேறானவை. ஆனால், மொழிவாரி மாநிலங்கள், புதிய மாவட்டங்கள் உருவானது ஆகிய காரணங்களால் காலப்போக்கில் திருவள்ளூர் என தனி மக்களவை தொகுதி இல்லாமலே போனது. இந்நிலையில் தான், கடந்த 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்படி, திருவள்ளூர் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. இதில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி( தற்போது தனி தொகுதி), திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
திருவள்ளூர் மக்களவை தொகுதி எப்படி:
தமிழ்நாட்டில் உள்ள 7 தனி தொகுதிகளில் திருவள்ளூரும் ஒன்று. அதாவது, பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தொகுதி ஆகும். தனித்தொகுதியாக உருவாக்கப்பட்ட திருவள்ளூர் மக்களவை தொகுதியில், சென்னை நகரின் சில பகுதிகளும், புறநகர் பகுதிகளும் அடங்கும். கும்மிடிபூண்டி, பொன்னேரி தவிர மற்ற பகுதிகளில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இவற்றில் பணியாற்றும் பணியாளர்களும், தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் தொகுதி இது. அதாவது வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஒன்று என கூறலாம். ஆந்திரமாநிலத்தின் எல்லையை ஒட்டி இருப்பதால் இங்கு தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம். ஆதிதிராவிட மக்களும் வன்னியர்களும் கணிசமாக உள்ளனர்.
தொகுதியின் பிரச்னை என்ன?
தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பினும், இந்த தொகுதியின் பெரும்பகுதி விவசாயத்தை நம்பி உள்ளது. நெல், பருப்பு வகைகள் மற்றும் நிலக்கடலை ஆகியவை முக்கிய பயிர் வகைகளாக உள்ளன. அடையாறு மற்றும் கூவம் ஆற்றைக்காட்டிலும் பெரிய ஆறாக சொல்லப்படும் கொசஸ்தலை ஆறும், திருவள்ளூரில் இருந்தாலும் இங்கு தண்ணீர் பிரச்னை என்பது தலையாய பிரச்னையாக உள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதும், சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் இங்கு கொட்டப்படுவதும் நீண்டநாள் பிரச்சனையாக உள்ளன.
திருவள்ளூர் மக்களவை தொகுதி தேர்தல் வரலாறு:
பழைய திருவள்ளூர் மக்களவை தொகுதியில் 1951, 1957 மற்றும் 1962ம் ஆண்டுகளில் என மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அந்த அனைத்திலுமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தான் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதேநேரம், 2008ம் ஆண்டு புதியதாக உருவாக்கப்பட்ட பிறகு திருவள்ளூர் தொகுதிக்கு இதுவரை, மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு முறை அதிமுக வேட்பாளரும், ஒருமுறை திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
1951
மரகதம் சந்திரசேகர்
காங்கிரஸ்
1957
ஆர். கோவிந்தராஜுலு நாயுடு
காங்கிரஸ்
1962
வி. கோவிந்தசாமி நாயுடு
காங்கிரஸ்
2009
வேணுகோபால்
அதிமுக
2014
வேணுகோபால்
அதிமுக
2014
ஜெயக்குமார்
காங்கிரஸ்
வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் – 10,10,968
பெண் வாக்காளர்கள் – 10,46,755
மூன்றாம் பாலினத்தவர் – 375
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
கும்மிடிப்பூண்டி – கோவிந்தராஜன் (திமுக)
பொன்னேரி – துரை சந்திரசேகர் (காங்கிரஸ்)
பூந்தமல்லி – கிருஷ்ணசாமி (திமுக)
திருவள்ளூர் – வி.ஜி. ராஜேந்திரன் (திமுக)
ஆவடி – நாசர் (திமுக)
மாதவரம் – சுதர்சனம் (திமுக)
திருவள்ளூர் எம்.பி., ஜெயக்குமர் சாதித்ததும், சறுக்கியதும்?
வேலைவாய்ப்பு உள்ளிட்ட 29 விவாதங்களில் பங்கேற்று தொகுதி மக்களின் பிரச்னைகளை ஜெயக்குமார் பேசியுள்ளார். நிண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த திருப்பாலைவனம் – மீஞ்சூர் சாலை பணியும் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளார். சாலை வசதி, உயர் கோபுர மின் விளக்குகள், குடிநீர் வசதி ஆகிய 267 பணிகளுக்காக, மக்களவை உறுப்பினருக்கான ரூ.17 கோடி நிதியில் இருந்து ரூ.15 கோடியே 35 லட்சத்து 21 ஆயிரம் செலவு செய்துள்ளார்.
அதே நேரம், மீனவர்களின் நீண்டகால கோரிக்கையான பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை எடுக்காதது, ரயில்வே மேம்பால பணிகளை முடிக்காதது போன்றவை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. மாதவரம் தொடங்கி ஆரம்பாக்கம் வரையிலான சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல ஆண்டுகளாக முடியாமல் இருப்பது, திருவள்ளூரில் சுரங்க நடைபாதை அமைக்காததும் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.