Bangladesh Election: வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் பொதுத்தேர்தல்:
அண்டை நாடான வங்கதேசத்தின் அரசியல் சூழல் என்பது, இந்தியாவின் அமைதியான சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினரின் வன்முறைக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த சூழலில் அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தின் செயலி செயலிழந்து இருப்பது ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவருக்கு வீட்டுச் சிறை:
பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, ஒரு நடுநிலையான இடைக்கால அரசை நிறுவியபிறகே தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இந்த கோரிக்கையை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு நிராகரித்தது. இதனை கண்டித்து முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதோடு, இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி கலீதா வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வெடித்த வன்முறை – 4 பேர் பலி:
எதிர்க்கட்சி தலைவரின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த 5 பள்ளிகளுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். அதோடு, இந்திய எல்லையான பெனாபோலில் இருந்து சென்ற பெனாபோல் விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகள் காரணமா? அல்லது எதிர்க்கட்சியின் வன்முறையால் ஏற்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள தீயணைப்பு சேவை புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 16 மணி நேரத்தில் 14-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதனால் வங்கதேசத்தின் முக்கிய நகரங்கள் கலவர பூமியாக காட்சியளிக்கின்றன.
செயலிழந்த செயலி:
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்து இருப்பது வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்கள் அன்றைய தினம் முதல் தாங்கள் வாக்களிக்கும் மையங்களைக் கண்டறிவது உள்ளிட்ட விவரங்களைக் கண்டறிய வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய Tk21 கோடி செயலி செயலிழந்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில், செயலியை அணுகுவதில் உள்ள சிக்கல் தற்காலிகமானது. விரைவில் அது தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலியை அணுக முடியாததற்கு, ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்த முயன்றது கூட காரணமாக இருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இன்று வங்கதேச பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.