Ayodhya Ram Temple Celebration : கடல் மீது விளக்குகளால் ராமரின் ஓவியம் மிளிரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி தமிழக வருகை
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற வைணவ தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தனது பயணத்தின் இறுதி அங்கமாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், புண்ணிய தீர்த்தங்களில் குளித்து, அங்குள்ள ஆலயத்தில் இறைவழிபாடு நடத்தினார்.
இன்று காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடினார் . அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்யும் பிரதமர், இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தங்களை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.
டெல்லி சென்றடையும் பிரதமர் மோடி நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தீர்த்த கலசங்களை கொண்டு சேர்க்கிறார். தொடர்ந்து, குழந்தை ராமர் சிலையை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்து, ஆரத்தி வழங்க உள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஒட்டுமொத்த அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ
இதற்கிடையே மும்பை மாநகரத்தின் பாந்த்ரா- வோர்லி கடல் பகுதியில் விளக்குகளால், ராமரின் ஓவியம் மிளிர்கிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Mumbai: Bandra-Worli sea link lit up ahead of Pran Pratishtha ceremony of Ayodhya’s Ram Temple. (20.01) pic.twitter.com/EdcjBlX362
— ANI (@ANI) January 20, 2024
மும்பை பாந்த்ரா – வோர்லி கடல் இணைப்பு என்பது சுமார் 5.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட கேபிள் வயர்களால் அமைக்கப்பட்ட பாலமாகும். எட்டு வழித்தடங்கள் கொண்டிருக்கிறது. இது தெற்கு மும்பையில் உள்ள வோர்லி பகுதியை, மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள பாந்த்ராவுடன் இணைப்பது குறிப்பிடத்தக்கது.