ஓசூரில் மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம் செய்ததாக பாஜக நிர்வாகி உட்பட 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பயன்படுத்திய கணினியைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள சந்திரசூடேஸ்வரர் நகரில் ராம்குமார் என்பவர் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடையில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை பொதுமக்களுக்கு வங்கிக் கடன் பெற்றுத் தர விண்ணப்பம் பதிவு செய்யப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு கடன் திட்டத்தில் விண்ணப்பம் பதிவு செய்ய நேற்று முன்தினம் பொதுமக்கள் திரண்டனர்.
அங்கு விண்ணப்பம் பதிவு செய்ய பொதுமக்களிடமிருந்து ரூ.150 முதல் ரூ.200 வரை வசூல் செய்யப்பட்டது. மேலும், கடன் உதவி பெறுவதற்கான உத்தரவாதமாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியங்கா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராம்குமார் மற்றும் பாஜக நிர்வாகி உமா மகேஸ்வரி ஆகியோர் உரிய அனுமதியின்றி மத்திய அரசின் திட்டத்தில் கடன் பெற்றுத் தர பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தது தெரிந்தது.
இதையடுத்து, அங்கிருந்த டோக்கன் மற்றும் கணினியைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக பறக்கும் படையினர் ஓசூர் காவல் நிலையத்தில் ராம்குமார் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் மீது தேர்தல் நடத்தை விதிமீறி டோக்கன் விநியோகம் செய்து, பிரச்சாரம் மேற்கொண்டதாகப் புகார் செய்தனர். இதையடுத்து, போலீஸார் ராம்குமார் உள்ளிட்ட 2 பேரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதுதொடர்பாக உதவி தேர்தல் அலுவலர் பிரியங்கா கூறும்போது, “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தில் பயன் பெற பொதுமக்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால், அரசு அனுமதி பெறாமல் இதுபோல உரிய அனுமதி பெறாதவர்களிடம் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம். கடன் திட்டத்துக்கு டோக்கன் வழங்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
மேலும் காண