தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளுடன் “எனது பூத், வலிமையான பூத்” என்ற தலைப்பின் கீழ் உரையாடினார். அப்போது பிரதமர் மோடி, தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று மாலைச் செய்தி:தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!நேற்று காலைச் செய்தி:அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?கெட்டிக்காரன் புளுகாவது… pic.twitter.com/iHbDlYQKio
— M.K.Stalin (@mkstalin) March 30, 2024
இது தொடர்பான அவரது பதிவில், “ நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி! நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?
பிரதமர் மோடி அவர்களே… கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு! விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. “எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை! தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏபரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சூறாவளி பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பாஜக கூட்டத்தில் பங்கேற்றார். பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசை விமர்சித்து பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து வந்தார்.
தேர்தல் களம் சூடிபிடித்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். மேலும் அங்கிருக்கும் தேனீர் கடையில் மக்களோடு மக்களாக சேர்ந்து தேனீர் அருந்தினார்.
மேலும் காண