Suspension Of ASP Balveer Singh Revoked – What’s Going On With The Prisoner’s Tooth Extraction Case? | Balveersingh: ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து

Balveersingh: விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங்கின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து:
அம்பாசமுத்திரத்தில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்விர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அதோடு, வழக்கு விசாரணையின் முடிவில் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கமளித்துள்ளது. வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது, அவருக்கு எதிராக புகாரளித்த மற்றும் சாட்சியம் அளித்த நபர்களும் அச்சத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
பணியிடை நீக்கம் ரத்து ஏன்?
பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, “பல்வீர் சிங் தன் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் தொடர்ந்து ஆஜராகி வருகிறார். இதனிடயே, அவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  2020-ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான பல்வீர் சிங் உள்பட 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தமிழகத்தில் ஏ.டி.எஸ்பி-க்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு விரைவில் எஸ்.பி பதவி உயர்வு அளிக்கப்படவுள்ளது. ஆனால் அந்தப் பதவி உயர்வு பட்டியலில் பல்வீர்சிங் உள்பட சிலரின் பெயர்கள் இடம்பெறவில்லை. பணியிடை நீக்கம் உத்தரவு மட்டுமே ரத்து செய்யப்பட்டிருப்பதால், பல்வீர்சிங்குக்கு காவல்துறையில் பணி ஒதுக்கீடு வழங்கப்படலாம்” என காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்:
ஏஎஸ்பி பல்வீர்சிங் விசாரணைக்காக வந்தவர்களை கடுமையாக தாக்கியதோடு, பற்களைப் பிடுங்கியதாகவும்  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதையடுத்து 17 வயது சிறுவனின் பற்கள் பிடுங்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் சிலர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்பட்டதாக தொடரபட்ட வழக்கில், கிரைம் பிரான்ச் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.  இதனிடையே,  தமிழக அரசால் அமைக்கப்பட்ட அமுதா ஐஏஎஸ் தலைமையிலான உயர்மட்ட விசாரணை குழு கடந்த மாதம் விசாரணை மேற்கொண்டது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தான் பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

Source link