PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!

ஐபிஎல்லில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 64 ரன்கள் எடுத்திருந்தார்.  பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களையும், சாம் கர்ரன் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் ரன் எதுவும் இன்றி வெளியேற, அடுத்ததாக உள்ளே வந்த பிரப்சிம்ரன் சிங்கும் 4 ரன்களில் ஏமாற்றம் அளித்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷிகர் தவான் 14 ரன்களுடன் நடையைக்கட்ட, ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 5 ஓவர்களுக்குள் 20 ரன்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

சாம் கர்ரன் – சிக்கந்தர் ராஜா:

சாம் கர்ரனும் சிக்கந்தர் ராஜாவும் சொல்லி வைத்தார் போல் 22 பந்துகளை சந்தித்து தலா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் முறையே 29 மற்றும் 28 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அப்போது பஞ்சாப் அணி 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

தொடர்ந்து, 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த ஜிதேஷ் சர்மாவும் நிதிஸ் ரெட்டி வீசிய 16வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, பஞ்சாப் அணியின் கதை முடிந்தது என்றே தோன்றியது.

மீண்டும் இணைந்த அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடி:

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய வெற்றியை தேடி தந்த அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடி இந்த முறையும் ஹைதராபாத் அணிக்கு எதிராக கதகளி ஆட தொடங்கினர். கிடைத்த பந்துகளை எல்லாம் எல்லைக்கு அனுப்பி அசுர வைத்தனர். கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், உனத்கட் பந்துவீச வந்தார். முதல் பந்தை சிக்ஸருக்கு அசுதோஷ் அனுப்ப, இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்து வைட்டாக விழுந்தது. மீண்டும் அடுத்த பந்து சிக்ஸருக்கு பறக்க, 4 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தேவையாக இருந்தது. அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு ரன்களை இந்த ஜோடி சேர்க்க, மீண்டும் ஒரு பந்து வைட்டாக விழுந்தது.

இப்போது கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், அடுத்த பந்தில் 1 ரன் மட்டும் எடுக்க, ஒரு பந்தில் 9 ரன்கள் என்ற நிலையில் ஷஷாங்க் சிங் ஒரு சிக்ஸர் அடித்து முடித்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Source link