எனக்கு கலை மீது தான் முழு ஈடுபாடு உள்ளது என்று நடிகை சுகன்யா நேர்காணலில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சுகன்யா. இவர் அன்றைய காலக்கட்டத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்தார். சின்னத்திரைக்குள் நுழைந்த சுகன்யா ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளதோடு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றியுள்ளார்.
இதனிடையே ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் திறக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதில் தனது பங்களிப்பை அளிக்கும் பொருட்டு நடிகை சுகன்யா, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியிருந்தார். ஆடியோ வடிவில் முதலில் வெளியான இப்பாடல் விரைவில் வீடியோ வடிவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் வரிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் புரியும் வகையில் ஸ்ரீராமர் மகிமை, ராமாயண சுருக்கம், அயோத்தி கோயிலின் அம்சம் ஆகியவற்றை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.
கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றதைப் போல இந்த பாடலும் வரவேற்பை பெறும் என சுகன்யா நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனிடையே சுகன்யாவின் இந்த பாடலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், அவர் அரசியலுக்கு வரவுள்ளதாக பலரும் கணிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள சுகன்யா, தனது அரசியல் எண்ணம் பற்றி பேசியுள்ளார்.
அதன்படி, “அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் இதுவரை இருந்தது இல்லை. இனிமேலும் இருக்குமா என தெரியவில்லை. எனக்கு கலை மீது தான் முழு ஈடுபாடு உள்ளது. இதை கற்றுக் கொள்ளவே இந்த ஒரு ஆயுள் போதாது என நினைக்கிறேன். வாழ்க்கையே ஒரு பாடம் என்பதை போல நிறைய விஷயம் இருக்கிறது. எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு! இசையமைத்து எதிர்பார்ப்பை எகிற வைத்த நடிகை சுகன்யா..!