Vanathi Srinivasan Said That Jallikattu Is Part Of Sanatana Dharma – TNN | Jallikattu: ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி தான்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பாஜக சார்பில் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டபேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வருகின்ற ஜனவரி 22 ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கான அட்சதை, அழைப்பிதழ்கள் கோடிக்கணக்கான வீடுகளுக்கு சென்று வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அவற்றை ராமர் வந்ததை போல மக்கள் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு, ராமர் கோவிலுக்கு வர சங்கல்பம் எடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். பாகுபாடு இல்லாமல் அத்தனை ஆலயங்களிலும் தூய்மை பணி நடைபெறுகிறது. 22 ம் தேதி மக்கள் திரளாக கூடி ராமர் கீர்த்தனைகளை பாடி, கும்பாபிஷேகத்தை காணொலி வாயிலாக பார்க்க உள்ளனர். கும்பாபிஹேக நாளான்று வீடுகளில் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் விழா போல கொண்டாட உள்ளனர். நாடு முழுவதும் ஆன்மிக பேரலை எழுந்துள்ளது. அடிமை சின்னத்தை மாற்றி கலாச்சார நாயகனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் பொன்நாள் பாரத் வரலாற்றின் திருநாள். அதனை நாடு கொண்டாட தயாராகி வருகிறது.

மசூதி கோவிலை இடித்து தான் கட்டப்பட்டு இருந்தது. நியாயப்படி அந்த இடத்தை உரிமையாளரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். முதலமைச்சர் ராமர் கோயில் அழைப்பிதழை நேரில் வாங்கவில்லை. ஆனால் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அழைப்பிதழை வாங்கி, அயோத்திக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தகப்பனார் அரசியல் வேறு. மனைவி அரசியல் வேறு. மகன் அரசியல் வேறு என வேறு வேறு அரசியல் வழியில் செல்கின்றனர். ராமர் கோவிலுக்கு ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்வது போல ராமர் பக்தர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமய அடையாளம் இல்லாத திருவள்ளுவர் வரையப்பட்டது. பல்வேறு ஆன்மிக மடங்களில் சமய அடையாளம் உள்ள திருவள்ளுவர் படம் உள்ளது. அதனை தான் பாஜக எடுத்து பயன்படுத்துகிறது. திருவள்ளுவர் சமய‌ சார்பற்றவர் என்றால், திருக்குறளில் எத்தனை இடங்களில் விஷ்ணு, லட்சுமி பற்றி வந்துள்ளது தெரியவில்லையா? திருக்குறளை அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லையா? தமிழகத்தில் தாமரை மலர்ந்து 4 பேர் சட்டமன்றத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் ஆளுங்கட்சியாக வருவதை லட்சியமாக கொண்டுள்ளன. நாங்கள் எங்கள் கட்சியல வளர்க்க வேலை செய்கிறோம்.
ஜல்லிக்கட்டு, மஞ்சள் விரட்டு அனைத்தும் கோவிலோடு தொடர்புடையது. அதனை சு.வெங்கடேசனால் மறுக்க முடியாது. சாமி கும்பிடாமல் காளைகளை அவிழ்த்து விடுவதில்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து கலாச்சாரத்தை சீரழிப்பதை திமுக, கம்யூனிஸ்ட்கள் வேலையாக கொண்டுள்ளனர். கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள்தனம். ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அடிக்கடி தேர்தல் வருவதால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாது. அமைச்சர்களின் நேரம் தேர்தலில் செலவாகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை திமுக மறுப்பது சரியாக வராது‌. எப்படி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என கருத்துகளை சொல்லுங்கள். விவாதிப்போம். அரசியலமைப்பு சட்ட அதிகாரப் படி ஆளுநர் வேலை செய்கிறார். அனைத்து மக்களும் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் மதம், நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அரசு அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Source link