Tamil Nadu Is Likely To Experience Mist Fog In The Early Hours, According To The Meteorological Department. | TN Weather Update: அதிகாலையில் கொட்டப்போகும் பனி

தென்னிந்திய  பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
பனிமூட்டத்திற்கு வாய்ப்பு:
அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம் வானிலை மையம் தெரிவித்த நிலையில் இன்று உறைப்பனிக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நீலகிரியில் கடும் குளிர்:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் குளிர்காலமாகும். இந்த மூன்று மாதங்களும் பகல் நேரங்களில் அதிக வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது படிந்துள்ள நீர் துளிகள் பனித்துகள்களாக படிந்து உறைப்பனியாக காட்சியளிப்பது வழக்கம். இதனால் உதகை குதிரை பந்தைய மைதானம்,  காந்தள்,  தலைக்குந்தா , அவலாஞ்சி,  அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள  புல்வெளி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. குறிப்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் அரை அடி அங்குலத்திற்கு உறை பனி படிந்திருந்தது.  
கடந்த வாரம் உறை பனி பொழிவு காரணமாக உதகை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியஸும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. இந்நிலையில் இன்றும் உறைப்பனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Source link