Shiv Sena : சிவசேனா கட்சி போச்சா? உத்தவ் தாக்கரேவுக்கு பேரிடி.. மகாராஷ்டிர அரசியல் திருப்பம்

கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். பின்னர், பாஜகவுடன் இணைந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை ஏக்நாத் ஷிண்டே கலைத்தார். இதை தொடர்ந்து, முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று கொண்டார்.

மகாராஷ்டிர அரசியல் திருப்பம்:

கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டுவந்த நிலையில், உண்மையான சிவசேனா யார்? கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் சமர்பிக்கப்பட்டன. இதையடுத்து, கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால் அவர் தலைமையிலான அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடியாது. மகாராஷ்டிர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே தொடர்வார்" என தீர்ப்பு அளித்தது.

இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டேவையும் அவரை ஆதரித்து வரும் 38 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்கரே தரப்பு, மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளித்திருந்தனர்.

கட்சியை இழந்த உத்தவ் தாக்கரே:

இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பு விடுத்த கோரிக்கையை மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் இன்று நிராகரித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவே உண்மையான சிவசேனா என அங்கீகரித்துள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிரா சபாநாயகர் கூறுகையில், "எந்த அணிக்கு கட்சி சொந்தம் என்பது போட்டி அணிகள் உருவானபோது இருந்த சட்டமன்றப் பெரும்பான்மையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த முடிவை எடுத்துள்ளேன். சிவசேனா கட்சியின் சட்ட விதிகளை பரிசீலித்து முடிவுகளை அறிவித்துள்ளேன்.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்சி விதிகளில் இரு தரப்பிடையே ஒருமித்த கருத்து நிலவவில்லை. கட்சிகள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. தலைமைக் கட்டமைப்பில் இரு கட்சிகளும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. எனவே, சட்டமன்றக் கட்சியில் பெரும்பான்மை என்ற ஒற்றை அம்சத்தை கருத்தில் கொண்டேன்" என்றார்.

இதையும் படிக்க: Ayodhya Ram Mandir : "ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள மாட்டோம்" காங்கிரஸ் அறிவிப்பு

Source link