Sachin Tendulkar Farmer Protest | விவசாயிகள் மல்யுத்த வீரர்கள் மீது அக்கறை இல்லாத சச்சின்; பிரதமருக்காக மட்டும் பொங்குவது ஏன்?

தற்போது சர்வதேச அளவில் பேசப்பட்டுவருவது பிரதமர் மோடி லட்சத்தீவுகளுக்கு பயணம் செய்ததும் அதன் பின்னர் லட்சத்தீவின் சுற்றுலாத்துறையை இன்னும் மேம்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததும்தான். இதற்கு மாலத்தீவின் அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பிரதமர் மோடியின் திட்டம் மாலத்தீவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடியது எனக் கூறியதுடன் கடுமையாக சாடினர். இதற்கு இந்தியாவின் திரைப்பிரலங்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இணையத்தில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.  
இதனால், மாலத்தீவில் முன்பதிவு செய்யப்பட்ட 10,500 ஹோட்டல் அறைகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மாலத்தீவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படக்கூடும் என சொல்லப்படுகிறது. மேலும் எக்ஸ் வலைத்தள பக்கத்திலும் #BoycottMaldives  என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது. சச்சின் தெண்டுல்கர் சமூக வலைதளத்தில் அரசியல் சார்ந்த கருத்தினை வெளிப்படுத்துகின்றார் என்றால் அதில் ஒரு வரைமுறை வைத்துள்ளார். அதாவது இந்தியா குறித்து யாரவது கருத்து தெரிவித்துவிட்டால் அதனை எதிர்த்து அல்லது மறுத்து உடனே தனது கருத்தினைத் தெரிவித்து விடுகிறார். 

கடந்த 2021ஆம் ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் குறிப்பாக வடமாநில விவசாயிகள் டெல்லி பாராளுமன்றத்தை முற்றுக்கையிட ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே வந்தனர். விவசாயிகளின் அமைதியான போராட்டத்தினை பாஜக அரசு காவல்துறையைக் கொண்டு ஒடுக்கியது. விவசாயிகளின் போராட்டம் அவர்கள் மீது அரசு நடத்திய தாக்குதல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. இணையத்தை ஆக்கிரமித்ததால் வெளிநாட்டு திரைப்பிரபலங்கள் தொடங்கி உலக புகழ் பெற்ற முக்கிய பிரபலங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியது மட்டும் இல்லாமல் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்ததும் சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் நமது உள்நாட்டு விவகாரங்களில் பங்கேற்க முடியாது. இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும், இந்தியர்களே முடிவு எடுப்பார்கள்” என தெரிவித்தார். இது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தொடங்கி சச்சினின் ரசிகர்களுக்கே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உலகிற்கே உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் அமைதியாக போராடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் எல்லாம் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக கருதப்படும் சச்சின் தெண்டுல்கர் போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வெளிநாட்டு பிரபலங்களை எதிர்த்து கருத்து தெரிவித்தார்.
அதேபோல், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பெண் மல்யுத்த வீராங்கனைகள் அப்போதைய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து  ஆர்ப்பாட்டம் செய்தனர். பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கபடாததால்,  ஏப்ரல் 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் உள்நாட்டு, சர்வதேச போட்டிகள் பலவற்றில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மாதக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நெருங்கிய நண்பரான உத்திரபிரதேச மாநில மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். இது ஷாக்‌ஷி மாலிக்கிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பத்திரிகையாளர் சந்திப்பில், “தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக ஒரு பெண் வரவேண்டும் என தான் விரும்பியதாகவும், முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடக்கூடாது என ஷாக்‌ஷி மாலிக் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகுரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறினார்.  நான் இதயத்தில் இருந்து போராடினேன்  எனக்கு பலன் கிடைக்கவில்லை எனக்கூறிவிட்டு மல்யுத்த விளையாட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்தார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில் தனது காலணியைக் கழட்டி மேசையில் வைத்தார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் ஷாக்‌ஷி மாலிக்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். 

இந்தியாவில் உள்ள விளையாட்டுத் துறையில் மற்றொரு அங்கமாக இருப்பது மல்யுத்தம்.  மல்யுத்ததில் இந்தியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பெருமை தேடித் தந்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறி போராட்டம் நடத்தியபோது சச்சின் தெண்டுல்கர் குரல் கொடுக்கவில்லை. மாதக்கணக்கில் வீரர் மற்றும் வீராங்கனைகள் போராட்டம் நடத்தியபோதும் குரல் கொடுக்கவில்லை. கடந்த மாதத்தில் ஷாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக கண்ணீர் மல்க கூறியபோதும் சச்சின் வாய் திறக்கவில்லை. சச்சின் போன்ற உலகப் பிரபலம் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தால் அந்த போராட்டங்கள் அனைத்தும் உலக அளவில் பெரும் கவனத்தினை பெற்றிருக்கும். வெளிநாட்டு ஊடகங்கள் சச்சினின் குரலை செய்தியாக்கினாலே மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் சச்சின் தெண்டுல்கர் விவசாயிகள் போராட்டத்திற்கும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கும் ஆதரவாக குரல் கொடுக்ககூடாது என்பதைவிட பாஜகவுக்கு எதிராக, பிரதமர் மோடிக்கு எதிராக குரல் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளாரோ என்ற சந்தேகத்தை எழுப்பாமல் இல்லை. ஆனால் சச்சின் போன்ற இந்தியாவின் அடையாளமாக கருதப்படுபவர் தன்னை வளர்த்தெடுத்த விளையாட்டுத் துறையில் பெண் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக போராடும்போது கப்சிப் என இருந்ததை யோசிக்கும்போது சச்சின் மீது இருந்த மதிப்புமிக்க பிம்பம் சுக்கு நூறாக உடைகிறது.  
 

Source link