குடியரசு தினத்திற்கு முன்னதாக மத்திய அரசு பதம் விருதுகள் அறிவிப்பது வழக்கம். அதாவது, பதம் ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் அந்தந்த ஆண்டில் யாருக்கு அளிக்கப்படவுள்ளது என்பதை அறிவிக்கும். அதனடிப்படையில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேமுதிக தொண்டர்களுக்கும் விஜயகாந்த் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தாலும், விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து தேமுதிக பொதுச் செயலாளரும் மறைந்த விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், கேப்டனுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பத்ம பூஷன் விருது காலம் கடந்து அறிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருந்தபோது கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக வாங்கியிருப்போம். கேப்டனுக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை கேப்டன் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம் என கூறியுள்ளார். பிரேமலதா விஜயகாந்தின் இந்த கருத்து குறித்து தேமுதிக வட்டாரத்தில் தற்போது பரவலாக பேச்சு எழுந்துள்ளது.