Parliament Elections 2024 Are Heating Up: PMK General Committee Meeting On February 1, Alliance Result Will Be Announced | PMK Meeting: சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்

PMK Meeting: பாமக பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெறும் என,  அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
 
பாமக பொதுக்குழு கூட்டம்:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னையில் பிப்ரவரி 1-ஆம் தேதி பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கூட்டம்! பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் -2024 வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு இப்பொதுக்குழு தொடங்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையேற்பார். கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
 
நிர்வாகிகளுக்கு அழைப்பு:
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் களம்:
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய மற்று மாநில அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளுமே தேர்தல் பணிக்கான குழுக்களை அமைத்துள்ளன. மக்கள் நீதி மய்யமும் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட உள்ளது. இந்நிலையில், பாமக பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தனித்து போட்டியிடலாமா அல்லது பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா? கூட்டணி அமைத்தால் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக உடன் பாமக கூட்டணி?
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் சேர்ந்த பாமக, 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் சேர்ந்தே களம் கண்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியே இருக்கிறது. அதோடு, தற்போதைய சூழலில் பாமக எந்த கூட்டணியிலும் இல்லை எனவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறி இருந்தார். இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே திமுக மற்றும் பாமக இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Source link