மிஷ்கின்

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த திரைமொழியை உருவாக்கி இருக்கிறார் மிஷ்கின். தற்போது ரிலீஸூக்கு தயாராக இருக்கும் டெவில் படத்தின் மூலம் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

டெவில்

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ, ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.

டெவில் படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்திற்கு இசையமைத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

டைரக்‌ஷன் மட்டும் எனக்கு பத்தல

டெவில் படத்திற்கு தன்னை இசையமைக்கும்படி இயக்குநர் ஆதித்யா தன்னிடம் கேட்டபோது தான் ஆச்சரியப்படும் விதமாக உடனே சம்மதித்ததாக மிஷ்கின் கூறினார். சினிமாவில் டைரக்‌ஷன் ஒன்று மட்டும் தனக்கு போதவில்லை என்றும், தொடர்ந்து ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று ஒரு தாகம் தனக்குள் இருந்துகொண்டே இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இந்த தாகத்தை தீர்த்துகொள்ள முடியும் என்று தனக்கு தோன்றியதால் தான் உடனே சம்மதம் தெரிவித்ததாக மிஷ்கின் கூறினார்.

இளையராஜாவை யாராலும் வெறுக்க முடியாது

மேலும், இந்த நேர்காணலில் தனது வாழ்க்கையில் உடைந்து அழுத தருணம் ஒன்றைப் பற்றி மிஷ்கின் பகிர்ந்துகொண்டுள்ளார். “என் வாழ்க்கையில் நிறைய தருணங்களில் நான் அழுதிருக்கிறேன், ஆனால் உடைந்து அழுத தருணம் என்றால் இளையராஜாவின் அலுவலகத்தின் முன் நின்ற அழுத நிகழ்வை குறிப்பிடுவேன். ஒரு முறை எனக்கும் இளையராஜாவுக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வந்தது. நான் எப்போதும் அவரை அப்பா என்று தான் கூப்பிடுவேன்.

நாங்கள் சண்டைபோடும்போதும்நான் அவரை அப்பா என்று அழைத்து தான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது வெளியே நின்றபோது இளையராஜா ஏதோ சொல்ல என்னை அழைத்தார். நான் சொல்லுங்க அப்பா என்று கேட்டேன். உடனே அவர் “என்னை அப்பா என்று கூப்பிடாத, நீ என்ன எனக்கா பிறந்த?” என்று என்னை கேட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

தான் எனது தாயின் இடத்தில் வைத்த ஒருவர் என்னை அப்படி கேட்டது என்னை உடைத்துவிட்டது. அந்த இடத்தில் ஒரு மணி நேரம் நின்றபடி அழுதுகொண்டிருந்தேன். அவர் ரொம்ப சாதாரணமாக அதை சொன்னார். என்னால் அவரை வெறுக்க முடியவில்லை. இளையராஜாவை யாராலும் வெறுக்கவே முடியாது“ என்று மிஷ்கின் கூறியுள்ளார்.