ரஞ்சி கோப்பையில் தற்போது கர்நாடகாவை வழிநடத்தி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுக்கு தற்போது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக அணி கேப்டன் மயங்க், ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, விமான நிலையத்தில் விமானத்தில் ஏறியவுடன், அவருக்கு வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதை விமானத்தில் இருந்த அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார் மயங்க் அகர்வால். இதையடுத்து, மயங்க் உடனடியாக அகர்தலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயங்கை சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது எந்த வித ஆபத்தும் இல்லை என்றும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நடத்தும் காவல்துறையினர்: என்ன நடந்தது?

மயங்க் அகர்தலாவிலிருந்து மதியம் 2.30 மணிக்கு விமானத்தை பிடிக்க வேண்டியிருந்தது. அப்போது அவர் விமானத்தில் ஏறியதும், திடீரன அவரது தொண்டையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மயங்க் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கி, அகர்தலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மயங்க் அகர்வாலுக்கு திடீரென ஏன் இப்படி நடந்தது…? என்ன காரணம் என்ற நோக்கத்தில் விசாரணை நடத்துகின்றனர்.

ரஞ்சி டிராபியில் கர்நாடகா அணியின் கேப்டன் மற்றும் ஒரு பேட்ஸ்மேனாக மயங்க் அகர்வால் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 109 ரன்களும், கோவாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில்114 ரன்களும் எடுத்தார் மயங்க் அகர்வால். இதன்பிறகு, மயங்க் அகர்வால் சமீபத்தில் திரிபுராவுக்கு எதிராக அகர்தலாவில் ஜனவரி 26 முதல் 29 வரை ஒரு போட்டியில் விளையாடினார், அதில் அவர் 51 மற்றும் 17 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் கர்நாடகா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் ஷபீர் தாராபூர் இதுகுறித்து கூறுகையில், “ இந்த விஷயம் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. மயங்க் அகர்வாலுக்கு என்ன நடந்தது என்று முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே எதையும் கூற முடியும்.” என்று தெரிவித்தார்.

மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணி, இப்போது ரஞ்சி கோப்பையில் தனது அடுத்த போட்டியில் ரயில்வேஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது சூரத்தில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில், மயங்க் அகர்வால் உடல் நலம் குணமாகி விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை:

இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வந்த மயங்க் அகர்வால், சில காலமாக இந்திய அணியில் விளையாடவில்லை. கடைசியாக இவர் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடினார். அதன்பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

மயங்க் அகர்வாலில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

மயங்க் அகர்வால் இதுவரை இந்தியாவுக்காக இதுவரை 21 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 36 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 41.33 சராசரியுடன் 4 சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் உள்பட 1488 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 243 ஆகும். இது தவிர, ஒருநாள் போட்டியில் 5 இன்னிங்ஸ்களில் 86 ரன்கள் எடுத்தார். இந்த காலகட்டத்தில் மயங்கால் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை. மயங்க் 2018 டிசம்பரில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.