சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ஓடிடி தளங்கள் வாங்க தயங்குவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ்

சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானப் படம் மஞ்சும்மல் பாய்ஸ். தமிழில் இப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று இப்படத்தில் படக்குழு நிச்சயமாக எதிர்பார்த்திருக்காது. மலையாள சினிமாவில் வரலாற்றில் அதி விரைவில் 100 கோடி வசூல் ஈட்டிய முதல் படம் என்கிற வரலாற்றை மஞ்சும்மல் பாய்ஸ் படம் உருவாக்கியுள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்கள் மட்டுமில்லாமல் சிற்சில ஊர்களில் கூட இப்படம் திரையிடப்படுகிறது. மல்டிப்ளக்ஸில் ஒவ்வொரு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படியான நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

ஏன் தயங்குகின்றன ஓடிடி நிறுவனங்கள் ?

திரையரங்குகளில் ஒரு மாத காலத்தை நிறைவு செய்ய இருக்கிறது மஞ்சும்மல் பாய்ஸ். அடுத்தகட்டமாக இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை குறைந்தபட்சம் 20 கோடி ரூபாய் அளவிற்காவது விற்பதில் படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனால் ஏற்கனவே திரையரங்குகளில் பார்த்து தீர்ந்துவிட்ட இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் இவ்வளவு அதிகம் விலை கொடுத்து வாங்கினால் அது தங்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்று ஓடிடி நிறுவனங்கள் கருதுகின்றன. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் 10 கோடிவரை விலைகொடுத்து இந்தப் படத்தின் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளவே ஓ.டி.டி. நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால் தயாரிப்பாளர்கள் இதற்கு தயக்கம் காட்டி வருகிறார்களாம்.

தாக்குப்பிடிக்குமா ஓடிடி நிறுவனங்கள்?

கொரோனா பெருந்தோற்று காலத்தில் இனிமேல் திரையரங்குகளுக்கு கூட்டம் வராது. ஓ.டி.டி. தளங்கள் தான் சினிமாவின் அடுத்த கட்டம் என்று கூறப்பட்டது. இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஓ.டி.டி. நிறுவனங்கள் பெரும் தொகை கொடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை வாங்க முன்வந்தன. ஆனால் தற்போது திரையரங்குகளுக்கு மீண்டும் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.

பெரிய ஸ்டார்கள் என்றாலும் நல்ல கதைகளைக் கொண்ட சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலும் மக்கள் அதை திரையரங்கில் பார்த்து ரசிக்கவே விரும்புகிறார்கள். வெகு சிலப்படங்கள் மட்டுமே திரையரங்கத்தைத் தொடர்ந்து ஓடிடியில் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இப்படியான நிலையில் ஓடிடி நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க குறைந்த விலைக்கு படங்களை வியாபாரம் பேசத் தொடங்கியுள்ளார்கள். 2021 ஆம் ஆண்டு ஒரு படத்திற்கு கொடுக்கப் பட்ட விலை தற்போது ஒரு படத்திற்கு கொடுக்கப் படும் விலையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமானதாக இருந்திருக்கிறது. தற்போது இந்த விலை சரிந்துகொண்டே தான் வருகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் படம் நிச்சயம் இன்னும் சில நாட்கள் திரையரங்குகளில் ஓடும் என்கிற நிலையில், அந்தப் படத்தை ஓடிடியில் பார்ப்பதற்கான ரசிகர்கள் என்பது குறையும் என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன