17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது.

லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. லக்னோ அணியின் இன்னிங்ஸை கேப்டன் கே.எல். ராகுலும் குயிண்டன் டி காக்கும் தொடங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தினை அணிக்கு கொடுக்கும் எண்ணத்தில் பவுண்டரிகளில் கவனம் செலுத்தி வந்தனர். போட்டியின் மூன்றாவது ஓவரில் டி காக் தனது விக்கெட்டினை கலீல் அகமது பந்தில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த படிக்கல் கலீல் அகமது வீசிய 5வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.

பவர்ப்ளேவில் லக்னோ அணி இரண்டு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்ததால் நிதானமான ஆட்டத்தினையே வெளிப்படுத்தி வந்தது. போட்டியின் எட்டாவது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் சுழலில் மார்கஸ் ஸ்டாய்னஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் தங்களது விக்கெட்டினை அடுத்தடுத்த பந்தில் இழந்து வெளியேறினர். இதனால் லக்னோ அணி பெரும் அதிர்ச்சிக்கு ஆளானது மட்டும் இல்லாமல் கவனமாகவே ரன்கள் சேர்த்து வந்தது.

லக்னோ அணி தனது நெருக்கடியை சமாளிக்க இம்பேக்ட் ப்ளேயர் விதியை பயன்படுத்தி தீபக் ஹூடாவை களமிறக்கியது. ஆனால் சிறப்பாக விக்கெட்டுகளை அள்ளிய குல்தீப் யாதவ் வீசிய 10வது ஓவரில் கேப்டன் கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். லக்னோ அணிக்கு இருந்த நம்பிக்கையும் முற்றிலும் சரிந்தது. இதனால் தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த லக்னோ அணியின் இம்பேக்ட் ப்ளேயர் தீபக் ஹூடா 13 பந்தில் 10 ரன்கள் மட்டும் எடுத்து இஷாந்த் சர்மா பந்தில் வெளியேறினார். அதன் பின்னர் களத்திற்கு வந்த க்ருனால் பாண்டியாவும் 3 ரன்னில் சொதப்ப ஆட்டத்தில் லக்னோ அணியால் மீளவே முடியவில்லை.

லக்னோ அணி 14 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின்னர் இணைந்த ஆயூஷ் பதோனி மற்றும் அஷ்ரத் கான் கூட்டணி நிதானமாகவும் பொறுமையாகவும் விளையாடியது மட்டும் இல்லாமல், அணியை சரிவில் இருந்தும் மீட்டனர். குறிப்பாக ஆயூஷ் பதோனி சிறப்பாக விளையாடி 31 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார்.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷத் கான் கூட்டணி 45 பந்தில் 73 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தது. ஆயுஷ் பதோனி 35 பந்தில் 55 ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தார்.