list of CM Arrested: ஊழல் வழக்கில் இதுவரை கைதாகியுள்ள முன்னாள் முதலமைச்சர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹேமந்த் சோரன் கைது:
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருப்பது, தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, முதலமைச்சராக இருந்தபோதே கைது செய்யப்பட்ட முதல் நபரா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர். அதேநேரம் கைது நடவடிக்கைக்கு முன்னரே ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஊழல் வழக்கில் கைது நடவடிக்கையை எதிர்கொண்ட ஒரே முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மட்டுமா என்றால், அதற்கான பதிலும் இல்லை என்பதே. காரணம் ஜார்கண்டை சேர்ந்த மூன்று பேர் தொடங்கி, தமிழகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா வரை பல முன்னாள் முதலமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
லாலு பிரசாத் யாதவ்:
கால்நடைத் தீவனம் வாங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பொதுச் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்திய, தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் 1990 களில் அம்பலமானது. வழக்கு விசாரணையின் முடிவில், 2013-ம் ஆண்டு லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.
ஜெயலலிதா:
தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது பதவிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், 2014ம் ஆண்டு அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். இதன் விளைவாக அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேல்முறையீடு செய்து விடுதலயாகி மீண்டும் முதலமைச்சரானார். ஆனால், கர்நாடக அரசு செய்த மேல்முறையிட்டில், ஜெயலலிதாவிற்கான தண்டனையை 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதா காலமானார்.
சந்திரபாபு நாயுடு
கடந்த ஆண்டு ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். நீண்ட நாட்களுக்கான இழுபறிக்கு பிறகு, தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
ஓம் பிரகாஷ் சவுதாலா
1989 மற்றும் 2005 க்கு இடையில் பலமுறை ஹரியானா மாநில முதலமைச்சராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. ஆசிரியர் பணி நியமன வழக்கில் 2013ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு, பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மது கோடா:
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரான மதுகோடா, அவரது பதவிக் காலத்தில் பணமோசடி செய்ததாகவும், வரம்பு மீறி சொத்து குவித்ததாகவும் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2006 – 2008 காலகட்டத்தில் UPA அரசாங்கத்துடன் கூட்டணியில் மதுகோடா முதலமைச்சராக பணியாற்றினார். அந்த சமயத்தில் நிலக்கரி மற்றும் சுரங்கத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஷிபு சோரன்:
டிசம்பர் 5, 2006 அன்று டெல்லி நீதிமன்றம் ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 1994 இல் அவரது தனிச் செயலாளரான ஷஷி நாத் ஜா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இவர் மூன்று முறை அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.
மேலும் காண