K.S. Chithra Faces Backlash For Social Meida Video Post On Ayodhya Event | K.S.Chithra: அயோத்தி ராமர் கோயில் விவகாரம்! பாடகி சித்ராவுக்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் ராமரை மனதார நினைத்து வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார். பிரதமர் மோடி , ராமர் கோயிலை திறந்து வைக்க உள்ள நிலையில் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பாடகி சித்ரா வேண்டுகோள்:
இந்நிலையில் தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி  கே.எஸ். சித்ராவும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் தினத்தன்று ராம மந்திரத்தை ஜெபித்து வழிபடுமாறு வீடியோ ஒன்றை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதியன்று நண்பகல் 12.20 மணிக்கு “ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம” எனும் ராமரின் மந்திரத்தை அனைவரும் உச்சரித்து வழிபடுங்கள். அன்று மாலை ஐந்து முக விளக்குகளை வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஏற்றி வைத்து ராமரின் நல்லாசியை பெறுங்கள் என கூறி ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ என உச்சரித்து வீடியோவை முடித்து இருந்தார். கே.எஸ். சித்ராவின் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தாலும், ஒரு சிலர் இதை வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
சித்ராவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்: 
அரசியல் நிலைப்பாட்டுக்கு இந்த வீடியோ மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார் சித்ரா என ஒரு சில விமர்சனங்களை எழுப்பும் நிலையில் அதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன். “ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று ராம நாமத்தை ஜெபித்து வீட்டில் விளக்கேற்றுங்கள் என கூறியது ஒரு குற்றமா? அல்லது கேரளாவில் உள்ளவர்கள் ராம நாமத்தை ஜெபிப்பது குற்றமா? இது போன்று அவதூறு செய்திகளை பரப்புபவர்கள் மீது ஏன் கேரளா அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது?” என சித்ராவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
மேலும் பாடகர் சூரஜ் சந்தோஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் சித்ராவை சாடி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ” இன்னும் எத்தனை அடையாளங்கள் அழிக்கப்பட உள்ளன. சித்ரா போன்ற இன்னும் எத்தனை முகங்கள் வெளிவர உள்ளன. வரலாற்றை மறந்துவிட்டு அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்” என குறிப்பிட்டு இருந்தார்.     அதே சமயம் பாஜக தலைவர் சுரேந்திரன், பாடகர் வேணுகோபால் என  பிரபலங்கள் பலரும் சித்ராவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். 

Source link