INDIA Bloc: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜியின் முடிவு, I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மேற்குவங்கத்தில் தனித்து போட்டி- மம்தா பானர்ஜி:
மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்குவங்கத்தில் தனித்து போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற கட்சி மற்றும் மேற்குவங்கத்தில் இருக்கிறோம். நாங்கள் தனியாகவே பாஜகவை தோற்கடிப்போம். நாங்கள் இந்திய கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறோம். ராகுல் காந்தியின் நியாய யாத்திரை எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது, ஆனால் அது குறித்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
West Bengal CM Mamata Banerjee says “I had no discussions with the Congress party. I have always said that in Bengal, we will fight alone. I am not concerned about what will be done in the country but we are a secular party and in Bengal, we will alone defeat BJP. I am a part of… pic.twitter.com/VK2HH3arJI
— ANI (@ANI) January 24, 2024
I.N.D.I.A. கூட்டணியில் சிக்கல்:
மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்குவங்கத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க அவர் விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஏற்கனவே, கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார், கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வது என்பது போன்ற பிரச்னைகள், பல்வேறு மாநிலங்களில் நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னிற்கு மேற்கொண்ட, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாகவே, கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கியபோதும் கூட, அதனை ஏற்க மறுத்தார். மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியாது எனவும், காங்கிரசுக்கு சொற்ப தொகுதிகளை ஒதுக்க முடியும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கூறி வந்தது. இந்நிலையில், மேற்குவங்கத்தில் கூட்டணி கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில், தொகுதிகளை ஒதுக்க முடியாது என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த முடிவு, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ள I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.