வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி:
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று (ஜனவரி 11) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1- 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
பின்னர், இலக்கை நோக்கி களம் இறங்கியது இந்திய அணி. இதில் முதல் இரண்டு பந்துகளிலியே ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் சுப்மன் கில் 23 ரன்களும், திலக் வர்மா 26 ரன்களும் எடுத்தனர். பின்னர், வந்த ஷிவம் துபே அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் கடைசி வரை களத்தில் நின்ற அவர் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 60 ரன்களை குவித்தார்.
இவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் போட்டியை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஆட்டநாயகன் ஷிவம் துபே:
இந்நிலையில், தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இச்சூழலில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஷிவம் துபே பேசுகையில், “மைதானத்தில் குளிர் அதிகமாக இருந்தது. இருப்பினும் இந்த மைதானத்தில் நான் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தேன். ஆரம்பத்தில் சற்று அழுத்தம் இருந்தது.
அப்போது என்னுடைய ஸ்டைலில் ஆட்டத்தை விளையாட வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் இருந்தது. முதல் 2 – 3 பந்துகளில் நான் அழுத்தத்தை உணர்ந்தேன். ஆனால் அதன் பின் நான் பந்தின் மீது கவனம் செலுத்தினேன். என்னால் பெரிய சிக்சர்கள் அடிக்க முடியும் என்பது எனக்கு தெரியும். அதே போல பந்து வீசுவதற்கு கிடைத்த வாய்ப்பிலும் என்னுடைய திட்டங்களை செயல்படுத்தினேன்” என்று கூறினார் ஷிவம் துபே.
மேலும் படிக்க: Rohit Sharma: டக் அவுட்டானாலும் சதம் அடித்த ரோஹித் சர்மா! எப்படி தெரியுமா?
மேலும் படிக்க: IND vs AFG T20I: அரை சதம் விளாசிய ஷிபம் துபே… 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!