அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை சிறுமி என கூறி பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா நகரில் வசிக்கும் அலிசா ஆன் ஜிங்கர் என்ற 23 வயது பெண் தான் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் பொருட்டு தனது வயது 14 என சொல்லி அறிமுகமாகியுள்ளார்.

முன்னதாக பள்ளி மாணவர் ஒருவருடன் தகாத உறவு பற்றிய உரையாடலில் ஈடுபட்டதை கொண்டு கடந்தாண்டு நவம்பர் மாதம் அலிசா தம்பா போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதேசமயம் மாணவர் ஒருவருடன் 30க்கும் மேற்பட்ட முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், பலருக்கும் ஆபாச வீடியோக்களை அனுப்பியதற்காகவும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் அபராதத் தொகை செலுத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அலிசாவின் குறிக்கோள் எல்லாம் வீட்டில் ஆன்லைன் மூலம் படிக்கும் மாணவர்களை நோக்கி இருந்துள்ளது. அவர்களிடம் சமூக வலைத்தள ஊடகங்களில் ஒன்றான ஸ்நாப்சாட் வழியே அறிமுகமாகி பின்னர் தனது வீடியோக்களை அனுப்பி கவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்படியான வகையில் தற்போது பள்ளி மாணவர் ஒருவர் தனது பாலியல் ஆசைக்காக அணுகியுள்ளார். இதுபற்றி தகவலறிந்த போலீசார் அலிசாவை கைது செய்துள்ளனர். இவர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்த பின், மேலும் 4 சிறுவர்கள் அவரால் பாதிக்கப்பட்டதாக காவல்துறையில் புகாரளிக்க வந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அலிசாவின் வலையில் விழுந்த பள்ளி மாணவர்களின் வயது 12 முதல் 15 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 11 பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலிசாவின் செயல் புளோரிடா மாகாண மக்களிடையே மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயதில் மூத்தவர், தன்னை விட இளம் வயதினருக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட இச்சைகளுக்கு இரையாக அவர்களை நினைத்திருக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அலிசாவால் பாதிக்கப்பட்டிருக்கும் யாராக இருந்தாலும் தைரியமாக முன்வந்து புகாரளிக்கலாம். அவர்களுக்கு தம்பா காவல்துறை உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலிசா போன்ற நபர்களால் யாரேனும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தை பொறுத்தவரை அங்கு பாலியல் உறவுக்கான வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அலிசா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.