தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதனால் இன்றும் பேருந்துகள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை விடுவிப்பு, பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கியது.
இதனால் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் ஓடுமா என்ற கேள்வி மக்களுக்கு எழுந்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொமுச மற்றும் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. இதனால் அந்த சங்க ஊழியர்களை கொண்டும், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கொண்டும் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.