பலரின் சிபாரிசுகள் மூலம் வருபவர்களும் வாரிசு நடிகர்களும் திரைத்துறையில் கால் பாதிக்க பெரும்பாடுபடுகிறார்கள். அவர்களில் ஒரு சிலரால் மட்டுமே வெற்றி காண முடிகிறது. அப்படி இருக்கையில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அப்படி வெற்றி கண்ட ஒருவர் தான் இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித்.
‘அமராவதி’ திரைப்படம் மூலம் அறிமுகமான அஜித் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவரின் படங்கள் வெளியாவதை ரசிகர்கள் திருவிழா கோலம் போல கொண்டாடுவார்கள். அவரின் ஆரம்ப காலகட்டத்தில் வெளியான ஒரு சில படங்கள் தோல்விகளை சந்தித்தன. அதற்கு காரணம் அவருக்கு சரியான ஆலோசனை கொடுத்து வழிநடத்த சரியான நபர்கள் இல்லாதது தான். அவராகவே கதைகளை கேட்டு நடித்து வந்தார். ஆசை, காதல் மன்னன், காதல் கோட்டை, அமர்க்களம் என அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்று வந்ததும் இடையிடையே ரெட், அசல், ஏகன், வரலாறு, தீனா உள்ளிட்ட சில படங்கள் தோல்வியை சந்தித்தது.
மங்காத்தா, பில்லா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பிறகு அஜித் மாஸ் நடிராக வலம் வந்தார். அதை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்கள் தொடர் வெற்றி படங்களாக அமைந்தன. கடந்த ஆண்டு அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் நடிக்கும் 63வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் அஜித் பற்றின தகவல் ஒன்றை தெரிவித்து இருந்தார். அமராவதி படத்தில் நடிகர் அஜித் அறிமுகமாவதற்கு முன்னரே மணிரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க போட்டோஷூட் நடத்தப்பட்டது. மணிரத்னத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரமணா தான் அப்படத்தை இயக்குவதாக இருந்தது.
ஆனால் அப்படத்தின் போட்டோ ஸ்டில்ஸ் எடுக்கும் சமயத்தில் அந்த போட்டோக்ராபருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘அமராவதி’ படத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் நடைபெறாமல் இருந்து இருந்தால் அஜித் முன்னரே மணிரத்னம் தயாரிப்பில் அறிமுகமாகி இருப்பார் என தெரிவித்து இருந்தார்.
மேலும் காண