கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, அந்த இடம் தற்போது இந்தியாவின் அதிக பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைநகராக மாறி வருகிறது என்றால் மிகையில்லை. கடந்த 6 நாட்களில் மட்டும், 19 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரைத் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல நூறு ஆண்டுகளாக, பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் பிறகு, கடைசியாக உச்சநீதிமன்ற ஆணை கிடைத்த பிறகு, அயோத்தியில் ராமர்கோவில் கட்டப்பட்டது. கடந்த 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை, பிரதமர் மோடியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.

பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான விவிஜபி-கள் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டு குழந்தை ராமரை தரிசனம் செய்தனர். அதன்பின், 23-ம் தேதி, அனைவரின் பார்வைக்கும் கோவில் திறக்கப்பட்டது.

சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இந்த கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் முதல்நாளே திரண்டு இருந்தனர். இன்னமும் கூட்டம் குறையாததால், தற்போதும் பக்தர்களின் கூட்டத்தால், அயோத்தி திணறி வருகிறது என்றாால் கூட மிகையில்லை.

இந்தச்சூழலில், உத்தரப்பிரதேச அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக குறைந்த பட்சம் தினமும் 2 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்வதாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதில், கடந்த 23-ம் தேதி, அதாவது பொதுமக்கள் தரிசனத்திற்கு திறந்துவிடப்பட்ட முதல்நாளில் 5 லட்சம் பேரும், 24-ம் தேதி 2.5 லட்சமும், 25-ம் தேதி 2லட்சம் பேரும், குடியரசு தினமான 26-ம் தேதி 3.5 லட்சம் பேரும், 27-ம் தேதி 2.5 லட்சம் பேரும், 28-ம் தேதி 3.5 லட்சம் பேரும் அயோத்தி ராமரை தரிசனம் செய்துள்ளனர் என உத்தரப்பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பக்தர்களின் வருகையும் தரிசனமும் எந்தவொரு சிக்கலும் இன்றி நடைபெறுவதற்காக, முதலமைச்சர் யோகி ஆதித்யானாத்தின் நேரடி மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிரமம் இன்றி, பக்தி பரவசத்துடன் ராமரை தரிசப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதாக உத்தப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

அதுமட்டுன்றி, மத்தியில் ஆளும் பாஜக அரசும், அயோத்திக்குச் செல்வதற்காக, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ரயில்கள் வருவதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளது. அதேபோல், விமான நிலையமும் தற்போது இயங்கி வருகிறது. அதேபோல், பக்தர்களின் காணிக்கையும் கோடிக்கணக்கில், குழந்தை ராமருக்கு குவிந்து வருகிறது. ஆனால், எவ்வளவு காணிக்கை என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்தியாவிலேயே அதிகளவு காணிக்கை குவியும் திருப்பதி கோவிலை மிஞ்சும் அளவில், ரொக்கும் பரிசுப் பொருட்களும் குவிந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பெல்லாம், உத்தரப்பிரதேசம் என்றால் காசிதான், ஆன்மிக ஈடுபாடு கொண்ட அனைவரின் நினைவுக்கும் முதலில் வரும். அயோத்தி குறித்து அறிந்து இருந்தாலும், காசிதான் அனைவரின் முதல் சாய்ஸ்ஸாக இருக்கும். ஆனால், தற்போது அயோத்தியில் ராமர் கோவில் வந்துவிட்டதால், தற்போது சூழல் மாற ஆரம்பித்திருக்கிறது என்பதை, அயோத்தி ராமர் கோவில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை நமக்கு உணர்த்துகிறது. அதுமட்டுமன்றி, அயோத்தியில் எங்கு திரும்பினும் ராம நாமத்தை நம்மால் கேட்க முடிகிறது. அந்த அளவுக்கு பக்தர்கள் திரண்டுள்ளனர்.

ராமர் கோவில் திறக்கப்பட்ட ஆரம்பக் காலம் என்பதால், இந்த அளவுக்குப் பக்தர்கள் கூட்டம் வருகிறதா அல்லது எப்போதுமே திருப்பதி போல் கூட்டத்தை நிறைந்திருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், ஆன்மிக சுற்றுலாத் தளமாக அயோத்தி ராமர் கோவில் ஜொலிக்கும் என்பது உறுதி.

அயோத்தி ராமர் கோவில் குறித்து, பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கத்தில் பக்தர்கள் கூட்டமும் அரசியல் ஆதாயமும் பெருகி வருவதாகவும் கட்டுரைகள் பதிவாகின்றன. எது எப்படி இருந்தாலும், ஒன்றை மட்டும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். அது என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான பிரசித்தப் பெற்ற கோவில்களைக் கொண்ட ஆன்மிக பூமியான இந்தியாவின், புதிய ஆன்மிக தலைநகராக அயோத்தி மாறியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.