ஹைதராபாத்தில் தடம்புரண்ட சென்னை ரயில்; 5 பெட்டிகளில் விபத்து- 10 பேர் காயம்

ஹைதராபாத்தில் சென்னையில் இருந்து சென்ற ரயில் தடம்புரண்ட நிலையில், 5 பெட்டிகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 10 பேர் காயம் அடைந்துள்ளனர். நாம்பள்ளி ரயில் நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்து நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனினும் ரயில் விபத்துகள் ஆங்காங்கே தொடர்ந்த வண்ணம் உள்ளன.
சென்னையில் இருந்து நேற்று இரவு (ஜன.9) சார்மினார் விரைவு ரயில் புறப்பட்டு, ஹைதராபாத்தை நோக்கிச் சென்றது. அங்குள்ள நாம்பள்ளி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த உடன், ஓட்டுநர் ரயிலை மெதுவாக ஓட்டியுள்ளார். எனினும் எதிர்பாராத விதமாக எஸ் 2, எஸ் 3, எஸ் 6 உள்ளிட்ட 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டன. நடைமேடையில் மோதி ரயில் பெட்டிகள் சேதம் அடைந்தன. இதில் சுமார் 10 பயணிகள் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை
இதைத் தொடர்ந்து அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளும் காவல்துறை ஊழியர்களும் காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள லால்குடா ரயில்வே அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
அதேநேரத்தில் தண்டவாளத்தில் இருந்து விலகிய ரயில் பெட்டிகளை மீட்டு, ரயில் பாதையை சரிசெய்யும் பணிகளும் தொடங்கி உள்ளன.
 

Source link