விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின் வாரியத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மின்சாரம் தாக்கி இரண்டு கால்களை இழந்த இளைஞரின் பெற்றோர் அரசு வேலை மற்றும் மருத்துவத்திற்கு உதவ கோரி விழுப்புரம் ஆட்சியரின் கால்களில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு மேலே தாழ்வான நிலையில் 22 கிலோ வாட் கொண்ட உயரழுத்த மின்சார கம்பி செல்வதால் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட கூடும் என நோக்கத்தில் பள்ளிக்கு மேலே தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்சார கம்பியை மாற்றி அமைக்க கோரி சோழாம்பூண்டி கிராம மக்களும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் நத்தமேடு மின்சார வாரிய அலுவலகம், விழுப்புரத்தில் உள்ள மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு மின்சார வாரிய அலுவலகங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 11 மாதங்களுக்கு முன் சோழாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மேலே தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்சார கம்பியை மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருந்த போதிலும் பள்ளிக்கு மேலே தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்சார கம்பியை மாற்றி அமைக்காமல் மின்சார வாரியத்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்குடனும், மெத்தனப் போக்குடனும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி மாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தபோது பள்ளி மாடியில் பந்து விழுந்துள்ளது. பொழுதாகிவிட்டதால் மறுநாள் பந்தை எடுத்து கொள்ளலாம் என இளைஞர்கள் சென்றுவிட்டனர். பின்னர், மறுநாள் காலை (டிச.18ம் தேதி) கிரிக்கெட் விளையாடி இளைஞர்களில் ஒருவரான 19 வயதான பூபாலன் என்பவர் மட்டும் தனியாக பள்ளியின் மாடிக்கு சென்று அங்கிருந்த பந்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது தாழ்வாக சென்ற உயரழுத்த மின்சார கம்பி இளைஞர் பூபாலனின் தலையில் உரசியுள்ளது. இதில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்து இளைஞர் பூபாலன் தூக்கி வீசப்பட்டு சுய நினைவை இழுந்துள்ளார்.

உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் பூபாலனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு இளைஞர் பூபாலன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இளைஞர் பூபாலனுக்கு இரண்டு கால்களும் அகற்றப்பட்டு கிட்டத்தட்ட 45 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், ஒரு சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு சோழாம்பூண்டியில் உள்ள வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதன்பிறகே நடந்த சம்பவம் குறித்தும், அலட்சிய போக்குடன் செயல்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர் பூபாலனின் பெற்றோர் காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தற்போது காணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இளைஞர் பூபாலன் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவத்தை அறிந்ததும், சம்பவம் நடைபெற்ற மறுநாளே அதாவது டிசம்பர் 19ஆம் தேதியே பூத்தமேடு மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரே நாளில் புதிய மின் கம்பங்களை நட்டு வைத்து பள்ளிக்கு மேலே தாழ்வாக சென்ற உயரழுத்த மின்சார கம்பிகளை இடமாற்றம் செய்துவிட்டு சென்றுள்ளனர். பள்ளிக்கு மேலே செல்லும் உயரழுத்த மின்சார கம்பிகளை இடமாற்றம் செய்ய 11 மாதங்களுக்கு முன்பே அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை செய்யாமல் அலட்சியப் போக்குடன் இருந்து விட்டு இளைஞர் பூபாலன் பாதிக்கப்பட்ட பிறகே அவசர, அவசரமாக ஒரே நாளில் அந்த பணியை ”கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்று சொல்வதை போல மின்சார வாரிய அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர்.

மின்சார வாரியத்துறை அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கு காரணமாக இளைஞர் பூபாலன் தனது இரண்டு கால்களையும் இழந்து தவித்து வருகிறார். மின் வாரியத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மின்சாரம் தாக்கி தனது இரண்டு கால்களையும் இழந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கும் இளைஞர் பூபாலனுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு வேலை வழங்க வேண்டுமென கால்களை இழந்த இளைஞரின் பெற்றோர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பழனியிடம் கண்ணீர் மல்கள் காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர். மகனுக்கு உதவி செய்யக்கோரி தாய் ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.