பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹூசைன் ஷாஜிப் ஆகியோரை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
முசாவிர் ஹூசைன் ஷாஜிப்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்தவர். அப்துல் மதீன் தாஹா குண்டுவெடிப்பைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தல் ஆகியவற்றின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடியாக நடந்த கைது நடவடிக்கை:
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு நாட்டையே உலுக்கியது. இந்த குண்டுவெடிப்பில் முசாவிர் ஹூசைன் ஷாஜிப் முக்கிய குற்றவாளி என்றும், அப்துல் மதின் தாஹா சதி செய்தவர் என்றும் என்.ஐ.ஏ சமீபத்தில் அடையாளம் கண்டது. இதையடுத்து, தலைமறைவான இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்காக கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது.
அப்போது, இந்த முக்கிய குற்றவாளிகளுக்கு உதவிய சிக்கமகளூரை அடுத்த கல்சாவை சேர்ந்த முஸம்மில் ஷெரீப் என்பவரை கடந்த மார்ச் 26ம் தேதி என்.ஐ.ஏ கைது செய்தது. போலீஸ் காவலில் இருந்த ஷெரீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த மார்ச் 29ம் தேதி தலைமறைவான இரண்டு குற்றவாளிகளுக்கு குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்தது.
இந்தநிலையில், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று கொல்கத்தாவில் அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹூசைன் ஷாஜிப்பை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் காண