உலக வரலாற்றின் முக்கியமான நிகழ்வாக பனிப்போர் பார்க்கப்படுகிறது. வரலாற்றை புரட்டிப்போட்ட அந்த நிகழ்வின் தாக்கம் இன்றளவும் உலக நாடுகளில் தென்படுகிறது. ஒன்றாக இருந்த கொரியா, ஏன் இரண்டாக பிரிந்தது? இதில், அமெரிக்க, ரஷியாவின் பங்கு என்ன? தீர்வை நோக்கி ஒரு அடி கூட எடுத்த வைக்க முடியாதது ஏன்? என பல கேள்விகளுக்கு இந்த தொகுப்பு விடை காண முயற்சிக்கிறது.

பனிப்போருக்கு இரையான கொரிய தீபகற்பம்:

உலகில் நடந்து வரும் மோதல்கள் மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. உக்ரைன் – ரஷியா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் ஆகியவை ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் கொரிய தீபகற்பத்தில் போர் சூழும் அபாயம் உருவாகியுள்ளது.

உலக வல்லரசுகளான சோவியத் யூனியன் (தற்போது ரஷியா) மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையே நடந்த பனிப்போருக்கு கொரிய தீபகற்பம் இரையானது. அதன் விளைவாகத்தான், கடந்த 70 ஆண்டுகளாக வடகொரிய, தென்கொரிய நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. இவை இரண்டும் பிரிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கொரிய தீபகற்பம் ஒருங்கிணைந்த கொரியாவாகவே இருந்தது. அதை, பல ராஜ்ஜியங்கள் ஆட்சி செய்து வந்தன. கடந்த 1905ஆம் ஆண்டு, ரஷிய, ஜப்பான் நாடுகளுக்கிடையே நடந்த போரை தொடர்ந்து, ஜப்பானின் ஆளுகை கீழ் வந்தது கொரிய தீபகற்பம். இரண்டாம் உலக போர் முடியும் வரை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக கொரியாவில் ஜப்பானின் காலணி ஆட்சி நடந்து வந்தது. இந்த காலக்கட்டத்தில்தான், கொரிய இரண்டாக பிரிவதற்கான விதை விதைக்கப்பட்டது.

கொரியா இரண்டாக பிரிய காரணம் என்ன?

கடந்த 1945ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கொரிய தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை நேச நாடுகள் பிரித்து கொண்டன. அடுத்த மூன்று ஆண்டுகளில் (1945-48), சோவியத் ராணுவமும் அதன் கூட்டு சக்திகளும் தீபகற்பத்தின் வடக்கு பகுதியில் கம்யூனிச ஆட்சியை அமைத்தனர்.
தெற்கே, ராணுவ அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, அதற்கு நேரடி ஆதரவை வழங்கியது.

சோவியத் கொள்கைகள், வடக்கின் பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் விவசாய மக்களிடையே பிரபலமாக இருந்தபோதும், பெரும்பாலான நடுத்தர வர்க்க கொரியர்கள், தெற்கே தப்பி ஓடிவிட்டனர். அங்குதான், கொரிய மக்களில் பெரும்பாலானோர் இன்று வரை வசித்து வருகின்றனர். இதற்கிடையில், தெற்கில் அமைந்த அமெரிக்க ஆதரவு ஆட்சி, கம்யூனிச எதிர்ப்பை ஊக்குவித்து, வலதுசாரிகளை ஆதரித்தது.

கடந்த 1948 ஆம் ஆண்டு, தீபகற்பத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. இதில் பங்கேற்க, வடக்கு பகுதி மறுத்தது. இதை தொடர்ந்து, தெற்கு சியோலில் தனது சொந்த அரசாங்கத்தை உருவாக்கியது. இது வலுவான கம்யூனிச எதிர்ப்புடன் சிங்மேன் ரீ தலைமையில் உருவானது.

பியாங்யாங்கை தலைநகராக கொண்டு வடக்கு பகுதி வடகொரியாவாக உருவாக்கப்பட்டது. கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு என அதற்கு பெயர் வைக்கப்பட்டது. முன்னாள் கம்யூனிஸ்ட் கெரில்லா போராளியான கிம் இல் சுங், அதன் முதல் அதிபராக பதவியேற்றார்.