நீர்நிலைகளை மாசுபடுத்தினால் இனி சிறை இல்லை.. புது மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், நேற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர் மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிறை தண்டனைக்கு பதிலாக இனி அபராதம் மட்டும் வதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய சட்ட திருத்தத்தில் அதிரடி மாற்றங்கள்:

நீர் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) திருத்த மசோதா, 2024, கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம், 1974இல் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, நீர் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வரும் சிறிய குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக இனி அபராதம் மட்டும் விதிக்கப்பட உள்ளது. தண்ணீரை மாசுப்படுத்துவது தொடர்பான சிறிய குற்றங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவைக்கு இந்த சட்ட திருத்தம் பொருந்தும். இந்த சட்டத் திருத்தத்தின்படி, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்களை நியமிப்பதற்கான விதிகளை வகுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்?

மாநிலங்களுக்கு புதிய தொழிற்சாலைகள் வருகிறது என்றால், முதலில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். பின்னர், மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும். ஆனால், புதிய சட்ட திருத்தத்தின்படி, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்த பின்பு, அதற்கு மறுப்பு தெரிவிக்க அல்லது அதை ரத்து செய்ய அல்லது அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு வகுத்த விதிகளையே மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.

சுற்றச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை பலவீனப்படுத்தவும் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையிலும் புதிய சட்ட திருத்தம் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், "நீர் மாசுபாடு தொடர்பான பல்வேறு பிரச்னைகளைக் கையாள்வதில் அதிக வெளிப்படைத்தன்மைக்கு இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கும். அளவுக்கு மீறிய கண்காணிப்பை குறைக்கும். ஒழுங்குமுறை அமைப்புகள் மீதான தேவையற்ற சுமையை குறைக்கும்" என்றார்.

இந்த புது மசோதாவுக்கு திமுக, ஆர்எஸ்பி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி. கதிர் ஆனந்த், "மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை, குடிமக்கள் திருத்தச் சட்டம் போன்ற சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது" என்றார்.

Source link