கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம் | கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான போதிய வசதிகள் செய்து கொடுக்கும் வரையிலும், கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படும் என திட்டவட்டமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக தலைநகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பேசுகையில், 
”ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து புதிய நிலையத்தில் நிறுத்த போதிய இட வசதி இல்லை. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகளும் முழுமையாக முடிவடையவில்லை. கட்டுமானப்  பணிகள் முடிந்து ஆம்னி பேருந்துகள் வந்து செல்லவும், ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள் வந்து செல்லவும் ஏற்ற வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கதில் இருந்து இயக்குவோம். 
எனவே கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும். கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் கட்டிமுடிக்கப்படும் வரை இதே நிலை இருக்கும். ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெரிவித்ததைப் போல், ஆம்னி பேருந்துகளை 24 ஆம் தேதியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றவேண்டும் என்பது முடியாத ஒரு காரணம். அரசு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என தெரிவித்துள்ளனர். மேலும், சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு ஆம்னி பேருந்துகள் கட்டாயம் வர வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை” எனவும் தெரிவித்துள்ளனர். 
இதற்கு முன்னதாக அதாவது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.  இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளார்கள் தரப்பில், “தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு தினசரி 850 ஆம்னி பேருந்துகளும் வார இறுதி நாட்களில் 1280 ஆம்னி பேருந்துகளும் விழா காலங்களில் 1600 வரை ஆம்னி பேருந்துகள் தினசரி சென்னையில் இருந்து தென் தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தென் தமிழகம் செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.
தற்பொழுது ஜனவரி 24ஆம் தேதியிலிருந்து ஆம்னி பேருந்துகள் சென்னை நகரத்திற்குள் பயணிகளுடன் வர அனுமதி இல்லை என்றும் பயணிகள் இல்லாமல் பேருந்துகளை சென்னை நகரத்திற்குள் இயக்கலாம் என அரசு சார்பாக தெரிவிக்கிறார்கள். 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் ரோட்டில் வரதராஜபுரத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பார்க்கிங் செய்து பேருந்துகளை பராமரிப்பதற்கு அரசு ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளது. அந்த இடம் தயாராகும் வரை  பேருந்துகளை  கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் பயணிகளுடன் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு இயக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தேவையான வசதிகளையும் உரிமையாளர்களிடம் கலந்து ஆலோசித்து செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம் “ என கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Source link