அயோத்தியில் எகிறும் வீட்டு மனையின் விலை.. அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்.. என்னவா இருக்கும்?

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் அயோத்தி:

ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், அயோத்தியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் மத்திய அரசு அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. 1450 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன்அயோத்தி விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மத கலாசார பாரம்பிரியத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி அயோத்தி ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் அயோத்தியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அயோத்தியில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வீட்டு மனை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழு நட்சத்திர குடியிருப்பு பகுதியில் அவர் வீட்டு மனை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தி ஹவுஸ் ஆப் அபிநந்தன் லோதா குடியிருப்பு நிறுவனத்திடமிருந்துதான் அமிதாப் பச்சன் வீட்டு மனையை வாங்கியுள்ளார். எவ்வளவு சதுர அடிக்கு, எவ்வளவு ரூபாய்க்கு அவர் நிலம் வாங்கியிருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், 10,000 சதுர அடி நிலத்தை 14.5 கோடி ரூபாய்க்கு அமிதாப் பச்சன் வாங்கிருப்பதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்:

ராமர் கோயிலில் இருந்து சுமார் 15 நிமிட தூரத்தில் அமிதாப் பச்சன் வாங்கிய வீட்டு மனை அமைந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து அரை மணி நேரத்தில் அங்கு சென்றுவிடலாம். வரும் 2028ஆம் ஆண்டு, மார்ச் மாதத்துக்குள் வீட்டு மனையில் குடியிருப்பு கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியிருப்பு வளாகத்தில் ஐந்து நட்சத்திர விடுதி ஹோட்டலும் அமைய உள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமிதாப் பச்சன், "எனது இதயத்தில் ஒரு தனித்து இடத்தைப் பிடித்திருக்கும் நகரமான அயோத்தியில் அபிநந்தன் லோதா குடியிருப்புடன் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். காலத்தால் அழியாத ஆன்மீக தளமாகவும்
கலாச்சார செழுமை மிக்க நகரமாகவும் அயோத்தி விளங்குகிறது. புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை கொண்டுள்ளது.

இது, அயோத்தியை நோக்கிய இதயப்பூர்வமான பயணத்தின் தொடக்கமாகும். அங்கு பாரம்பரியமும் நவீனமும் பின்னி பிணைந்துள்ளது.
உணர்வுப்பூர்வமான தொடர்பை உருவாக்கி என்னை தட்டி எழுப்புகிறது. உலகின் ஆன்மீக தலைநகரில் எனது வீட்டைக் கட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.

Source link