ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சுபாஷ் முண்டாவை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ராஞ்சியில் உள்ள தனது அலுவலகத்தில் சுபாஷ் முண்டா நேற்றிரவு இருந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயமடைந்த சுபாஷ் முண்டா உயிரிழந்த நிலையில், மர்ம நபர்கள் தப்பியோடினர்.
இதையறிந்த அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த கடைகளையும் சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், சுபாஷ் முண்டாவின் உடலைக் கைப்பற்றி, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர்.
சுபாஷ் முண்டாவின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை வளாகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.