ACTP news

Asian Correspondents Team Publisher

மாணவர்களுக்கு மடிகணினி வழங்குவார்களா? மாட்டார்களா? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

அரசின் நிதிநிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, துறைமுகம் தொகுதி தம்பு செட்டி தெருவில் உள்ள முத்தியால் பேட்டை மேல்நிலைப்பள்ளியில் ,இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நிதிநிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றார். ஆசிரியர் சங்கங்களுடன் 20 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதாகவும், ஆசிரியர்கள் கருத்துகள் குறித்து நிதி அமைச்சருடன் பேசி இருப்பதாகவும் அவர் கூறினார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்து சென்றது போன்று, ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை இலவசமாக பார்க்க, அரசு பள்ளி மாணவர்களை அழைத்து செல்வது குறித்து, துறை அமைச்சருடன் பேசி ஏற்பாடு செய்யப்படும் என்றும் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

மாணவர்களின் தகவல்களை எமிஸ் செயலியில் பதிவு செய்ய ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என்றறு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு சுலபமான முறையில் கையாளும் வகையில் செயலி மேம்படுத்தப்படும் என்றார்.