உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டியாக இருக்கிறார்… கடுமையாக விமர்சித்த எல்.முருகன்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.

கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா, கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, ஒரே மாதத்தில் மிக வேகமாக மத்திய ரயில்வே அமைச்சரால் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது என்றார்.

இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 10 புதிய வழித்தடங்ககள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.800 கோடி தான், 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய எல்.முருகன், சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

விரைவில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர், சேலம் உட்பட 75 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி கிடையாது என்ற அவர், உதயநிதி அரசியலில் கத்துக்குட்டியாக இருப்பதாக விமர்சித்தார். பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய எல்.முருகன், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதால் தமிழக அரசுக்கு தான் நல்ல பலன் கிடைக்கும் என்றார்.