மத்திய அணுசக்தித் துறையின் கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் அதிவேக ஈனுலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்த நிலையில், அதிலுள்ள ஆபத்துகள் குறித்து தமிழகத்தில் இயங்கி வரும் சூழலியல் அமைப்பான ‘பூவுலகின் நண்பர்கள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’மத்திய அணுசக்தித் துறையின் கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் பாவினி நிறுவனம் (Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd (BHAVINI) ) 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையைக் (Prototype Fast Breeder reactor (PFBR) ) கட்டியுள்ளது. திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட இந்த ஈனுலை இந்தியாவில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்
2004ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2010ஆம் ஆண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதன் தொழில்நுட்பமானது உலக நாடுகள் பலவும் பயன்படுத்தி கைகூடாத காரணத்தால் கைவிடப்பட்ட தொழில்நுட்பமாகும். இதன் காரணமாக இத்திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில் இப்போது 2024 டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. தாமதமான காலத்தில் இத்திட்டத்திற்கான செலவு திட்டமிடப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகரித்து ரூ. 3490 கோடியாக இருந்த செலவு மார்ச் 2023 கணக்கின்படி ரூ. 7700 கோடியாக உயர்ந்துள்ளதாக WNISR 2023 அறிக்கை கூறுகிறது.
ஆபத்தான தொழில்நுட்பம்
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை விட்டுவிட்டன. இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால், ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அந்த உலை மூடப்பட்டது.
பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர்பீனிக்ஸ் ஈனுலையும் அதிக பொருளாதாரச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது. அணுவுலைகளில் இருந்து உருவாகும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளான புளூட்டோனியத்தை ஈனுலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தி அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதுதான் இத்திட்டமாகும்.
மேலும், கூடங்குளம் அணுவுலைகள் போன்று மின்சாரம் தயாரிப்பதற்கு மட்டுமே Civilian List-ல் ஈனுலைகள் வராது. அதனால் பன்னாட்டு அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஈனுலைகளுக்குக் கிடையாது என்பதால் இந்த உலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகத்தையும் பல அணுசக்தித் துறை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.
மாற்றி நடக்கும் மத்திய அரசு
கூடங்குளம் அணுவுலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே வைக்க மாட்டோம் என மத்திய அரசு தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், தற்போது அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளை மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அணு சக்தித் துறையின் கல்பாக்கம் மையத்தில் இந்திய அணுமின் நிறுவனத்தின் சென்னை அணு மின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), முன்மாதிரி அதிவேக ஈனுலை (பாவினி அணுமின் திட்டம்), மற்றும் கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தின் (NRB) பிரிவுகள் உள்ளன.
2024 ஜனவரியில் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர், கல்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள DFRP (Demonstration Fast Reactor Fuel Reprocessing Plant) எனும் “மாதிரி அதிவேக ஈனுலை எரிசக்தி மறுசுழற்சி மையம்” ஒன்றைத் திறந்து வைத்தார். இதுமட்டுமின்றி ஏற்கெனவே கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் Nuclear Installation Local Authority (NILA) யின் அடிப்படையில் நிலம் வாங்க, விற்க வரைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் எல்லைப் பரப்பும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவது சுற்றுவட்டார மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிசம்பர் 26, 2023 அன்று ரஷ்யாவிலுள்ள இந்தியச் சமூகத்தினர் மத்தியில் பேசும்போது, “தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எதிர்காலத்தில் கூடுதல் அணு அலகுகள் அமைப்பது தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்’’ என்று மேலோட்டமாக ஒரு தகவலைத் தெரிவித்தார். இதுகுறித்தும் மத்திய அரசின் அணுசக்தித் துறை ஒரு செய்திக் குறிப்பைக் கூட வெளியிடவில்லை.
தமிழ்நாடு குப்பைத் தொட்டியா?
தமிழ்நாட்டின் நலனுக்கு எவ்வித பங்களிப்பும் தராத, உலக நாடுகள் அனைத்தும் கைவிட்ட, ஒரு ஆபத்தான தொழில்நுட்பத்தை கல்பாக்கத்தில் தொடங்கும் மோடி அரசின் சூழ்ச்சியை நாம் எதிர்க்க வேண்டும். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து அணுவுலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களை சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாடு இயற்கைப் பேரிடர்களில் சிக்கி கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் நிவாரணமாக ஒரு ரூபாய் கூட வழங்காத பா.ஜ.க. அரசு தொடர்ந்து நாசகாரத் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைப்பதை அனைத்துக் கட்சிகளும் அரசியல் அமைப்புகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் எனக் கோருகிறோம்’’.
இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் காண