இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

நெருங்கும் மக்களவை தேர்தல்

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று மதியம் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் தேசிய, மாநில அரசியல் கட்சிகள் முழுவீச்சில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டது. பிரதமர் மோடி தொடங்கி கட்சியின் கடைசி பிரதிநிதி வரை தங்கள் கட்சிகளுக்காக வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டனர். தமிழ்நாட்டிலும் திமுக கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில், அதிமுக கூட்டணி பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை.

ஒருபக்கம் பாஜக தன் பங்குங்கு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிற கட்சிகளை கூட்டணி சேர்த்து வருகிறது. இதனால் இந்த முறை களம் யாருக்கு சாதகமாக இருக்கப்போகிறது என கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு விதமான அரசியல் மாற்றங்களும் நிகழத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் கூட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அக்கட்சியை பாஜகவில் இணைத்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார். இந்த கட்சியின் முதல் மாநாடு பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து கட்சிக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் மன்சூர் அலிகான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். கண்டிப்பாக ஒரு தொகுதி வேண்டும் என கூட்டணி பேச்சுவார்த்தையின்போது கேட்போம் என மன்சூர் அலிகான் தெரிவித்த நிலையில், ஏற்கனவே ஆரணி தொகுதியில் தான் களமிறங்க போவதாகவும் அறிவித்து விட்டார். மேலும் அதிமுக தவிர்த்து பெரிய கட்சி ஒன்றுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தெரிவித்தது.

தலைவர் பதவியில் இருந்து நீக்கம்

இந்நிலையில் அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டதாக முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரை குழுவும் இவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும்.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் தெரிவிக்கையில், “தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் செயற்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.