Medicine Price Rise: மருந்துகளின் விலை 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. மருந்துகளின் விலை உயர்வு இந்த மாதத்துடன் (ஏப்ரல்) அமலுக்கு வரலாம் என தகவல் வெளியானது. இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மருந்துகளின் விலை உயர்கிறதா?
இந்த நிலையில், மருந்துகளின் விலை உயர்வு தொடர்பான தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. இவை அனைத்தும் பொய்யானவை என்றும் உள்நோக்கத்துடன் இம்மாதிரியான தகவல்கள் பரப்பப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஏப்ரல் 2024 முதல் மருந்துகளின் விலை 12 சதவீதம் வரை கணிசமான அளவில் உயரும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயர்த்தப்படும் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய செய்திகள் தவறானவை, உள்நோக்கத்துடன் பரப்பப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பரபரப்பு விளக்கம்:
மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை (DPCO) 2013இன்படி, மருந்துகள் இரண்டு வகைப்படும். ஒன்று பட்டியலிடப்பட்ட மருந்துகள் ஆகும். இரண்டாவது பட்டியலிடப்படாத மருந்துகள் ஆகும். மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் முதலாவது அட்டவணையில் மருந்துகளின் தயாரிப்பு முறை குறிப்பிடப்பட்டிருந்தால் அவை பட்டியலிடப்பட்ட மருந்துகள் ஆகும்.
மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் முதலாவது அட்டவணையில் மருந்துகளின் தயாரிப்பு முறை குறிப்பிடப்படவில்லை என்றால் அவை பட்டியலிடப்படாத மருந்துகள் ஆகும். மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் முதலாவது அட்டவணையில் வரும் மருந்துகள் அனைத்தும் அத்தியாவசியமானவை ஆகும்.
மருந்துகளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, “மருந்துத் துறையின் கீழ் உள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) ஆண்டுதோறும் மொத்த விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில் பட்டியலிடப்பட்ட மருந்துகளின் உச்சவரம்பு விலையை மாற்றியமைக்கிறது”
கடந்த 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டு, மொத்த விலைக் குறியீடு 0.00551 சதவிகிதம் உயர்ந்தது. இச்சூழலில், கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் கூட்டம் நடந்தது. அதில், மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலையை 0.00551 சதவிகிதம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
923 மருந்துகளின் உச்சவரம்பு விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில், 782 மருந்துகளுக்கான தற்போதைய உச்சவரம்பு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள விலையே வரும் 2025ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதி வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் காண