தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20.03.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

14.03.2024 முதல் 16.03.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

14.03.2024 முதல் 18.03.2024 வரை: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாத்தில் 33.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பணிக்கு செல்லும் மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.