டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் நோவா பிலிம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தி பாய்ஸ். கொரோனா காலத்தில் சென்னையில் வசிக்கும், வாழ்வு குறித்த நோக்கமே இல்லாத பேச்சுலர்களின் வாழ்கையினை சுவாரஸ்யமாகக் காட்ட முற்பட்டுள்ளார் இயக்குனர்.

படத்தில் ஷா ரா, கலக்கப் போவது யாரு வினோத், அர்ஷத், யுவராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்கியது மட்டும் இல்லாமல் சந்தோஷ் பி ஜெயக்குமாரும் நடித்துள்ளார். படத்தில் ஆர்யா, கிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதை

சென்னையில் தங்கி வேலைக்குப் போகும் மற்றும் வேலை தேடும் பேச்சுலர் நண்பர்கள். இவர்களுக்கு வேலை நேரம் தவிர முழு நேரமும் இருக்கும் ஒரே செயல் குடி, குடி குடி மட்டும்தான். இவர்கள் அனைவரும் இணைந்து அவர்கள் தங்கியுள்ள வீட்டில் தி பாய்ஸ் என்ற பெயரில் பார் நடத்துகின்றனர். இதனால் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தொல்லை ஏற்படவே, அவர்கள் காவல் துறையில் புகார் அளிக்கின்றனர். இதனால் அங்கிருந்து விரட்டப்படும் இவர்கள் வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பார் நடத்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடிபோகின்றனர்.

புது வீட்டுக்கு குடிபோனதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது. வீட்டிலேயே முடங்கி இருக்கும் இவர்கள் பார் நடத்தினார்களா இல்லையா? அதனால் அவர்கள் சந்தித்த பிரச்னைகள் என்னென்ன என்பது மீதி கதை.

படம் எப்படி இருக்கு?

ஜாலியான டார்க் காமெடி படத்தினை ரசிகர்களுக்கு தரவேண்டும் என படக்குழு முயற்சி செய்துள்ளது. ஆனால் டார்க் காமெடிகள் பெரும்பாலான இடங்களில் எடுபடவில்லை. படத்தின் திரைக்கதையும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாமல் உப்புசப்பில்லாமல் உள்ளது. பேச்சுலர்கள் தங்கியிருக்கும் வீடு எப்படி இருக்கும் என்பதை வலுக்கட்டாயமாக காட்டவேண்டும் என்பதைப்போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

படத்தின் காட்சிகளுக்கு ஏற்றவாறு அருண் கௌதமின் இசை படத்துக்கு கை கொடுக்கின்றது. சிறப்புத் தோற்றத்தில் வரும் ஆர்யா இடம்பெற்றுள்ள காட்சி மது பிரியர்கள் மத்தியில் கைத்தட்டலைப் பெறும். தொடர்ந்து பேச்சுலர்களை பொறுப்பற்றவர்களாக, மதுவுக்கு அடிமையானவர்களாக காட்சிப் படுத்துவதால், இதற்கு முன்னர் வெளியான ஸ்டீரியோ டைப் படங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

படத்திற்கு பலம்

சில காட்சிகள் உள்ளபடியே ரசிக்க வைக்கின்றது. கைத்தட்டலைப் பெறுகின்றது. மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குணா படத்தின் பாடலை இடம் பெறச் செய்ததைப் போல இந்த படத்திலும் கண்மணி பாடலை இடம்பெறச் செய்துள்ளனர். குணா படத்தின் பாடல் இடம்பெற்றுள்ள காட்சியைக் காட்டிலும் அந்த பாடலுக்காகவே கைத்தட்டலைப் பெற்றது. படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு ஒட்டவே இல்லை. படத்தில் கதாநாயகி இல்லாதது கதையின் தேவையாக உள்ளதால், வலிந்து கதாநாயகியை திணிக்காததற்கு நன்றிகள்.