Farmers Protest 2.0: விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க, எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இரவிலும் கண்ணீர் புகை குண்டு வீச்சு:
விவசாயிகளின் கோரிக்கைகள நிறைவேற்றுவது தொடர்பாக நடைபெற்ற, மத்திய அரசு உடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியை தழுவின. இதையடுத்து நேற்று காலை முதலே பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஷாம்பு பகுதியில், போலீசாரால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழலும் ஏற்பட்டது. இந்நிலையில், நள்ளிரவிலும் அந்த பகுதியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
#WATCH | Police use tear gas to disperse protesting farmers at the Haryana-Punjab Shambhu Border. The farmers have announced to continue to march towards the National Capital. pic.twitter.com/bJC0xXPCaU
— ANI (@ANI) February 13, 2024
விவசாயிகளின் கோரிக்கை:
பரபரப்பான சூழலுக்கு மத்திய்ல் போராட்டம் தொடர்பாக பேசும் விவசாய சங்க தலைவர்கள், “நாங்கள் புதிய கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை. அரசாங்கம் எங்களிடம் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. அந்த உறுதிமொழிகள் குறித்து நாங்கள் பலமுறை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தோம். இருப்பினும், அரசாங்கம் இன்றுவரை அதில் தீவிரம் காட்டவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை நாங்கள் கோரும்போது, அவர்கள் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். கடன் தள்ளுபடி மற்றும் சுவாமிநாதன் அறிக்கை பற்றி நாங்கள் விவாதிக்கும்போது, அவர்கள் உடன்படவில்லை. நாங்கள் இந்த நாட்டின் விவசாயிகள், நாங்கள் சண்டையிடமாட்டோம். நீங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டதை போன்று குறைந்தபட்ச ஆதார விலை சட்டம், சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் விளக்கம்:
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “ மோடி அரசு விவசாயத்துறை மேம்பாட்டிற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் அதிக அளவில் உழைத்துள்ளது. விவசாயிகள் கோரிக்கைகளை எழுப்பியபோது, உடனடியாக விவாதத்திற்கு ஒப்புக்கொண்டோம். நாங்கள் பல மணி நேரம் விவசாயிகள் சங்க தலைவர்களுடன் விவாதம் நடத்தினோம். உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா விலக வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் புதிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறோம், ஆனால் மாநில அரசுகள் மற்றும் விவசாய அமைப்புகள் போன்ற பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். போராட்டக்காரர்களிடம் வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என்று மட்டுமே கூறுவேன், மேலும் விவசாயிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
எல்லைகளில் பலத்த பாதுகாப்பு:
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்த கைவிடும்போது, வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக செல்வதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால், 2021ம் ஆண்டு சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்க்கூடாது என டெல்லி எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், கொக்கி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டெய்னர்கள் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வாகனங்களின் டயர்களை பஞ்சராக்க சாலைகளில் ஆணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு எல்லையில், 64 கம்பெனி துணை ராணுவப்படையினரும், 50 கம்பெனி ஹரியானா போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, காக்கர் ஆற்றுப்படுகையில் பள்ளங்களும் தோண்டட்டுள்ளன. ட்ரோன்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவற்றை எல்லாமும் மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் அடங்குவர்.
மேலும் காண