ராமநாதபுரம் மாவட்டம் ‘சாயல்குடி பேரூராட்சி’ கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் எப்போதும் பிசியாகவே இருக்கும். இங்குள்ள கன்னியாகுமரி சாலையில் இயங்கி வரும் தனியார் (அய்யங்கார்) பேக்கரியில் நேற்று இரவு 9 மணியளவில் மிக்சர், கேக் உள்ளிட்ட தின் பண்டங்கள் வாங்கிய ஒரு நபர் இதை கடனாக தருமாறும் பிறகு வந்து தருகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
அதற்கு பேக்கரி ஊழியர்கள் கடன் கொடுப்பது இல்லை என கூறியதை அடுத்து, ‘உங்க ஓனரிடம் சொல்லு நான் யார் தெரியுமா’..? எனக்கேட்டபடி பேக்கரி ஊழியரை ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டு ஊழியரின் செல்போனையும் கீழே தட்டிவிட்டுக்கிறார். தடுக்க வந்த மற்றொரு ஊழியரை வெளியில் இழுத்துப்போட்டு சரமாரியாக தாக்கி கும்மாங்குத்து விட்டிருக்கிறார். கடன் கொடுக்க மறுத்ததால் பேக்கரியில் பணிபுரிந்த ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிசிடிவி காட்சி ஆதாரங்களை வைத்து குற்றவாளிகள் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் வணிகர் சங்கத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இதே சாயல்குடி பஜாரில் புரோட்டா கொடுக்காததால் கடை உரிமையாளரை wrestling ஸ்டைலில் அடித்து துவைத்த சம்பவம் வியாபாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது கடன் கொடுக்காததால் பேக்கரி ஊழியர்களை அடித்த சம்பவம் வணிகர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
புரோட்டா கடையில் தகராறு செய்தவர்கள் மீது வழக்குப் பதிந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி சாயல்குடி தெருக்களில் தொடர்ந்து நடக்கத்தான் செய்கிறது. ஆங்காங்கே ரவுடிகள் உருவாகி ‘இப்பதான் நாங்க ரவுடியா ஃபாமாகி டீ,மிக்சர் வரைக்கும் வந்திருக்கோம், ‘அதுக்குள்ள போலீஸ் எங்களை புடிச்சி உள்ள போட்டா எப்புடி’ என தெனாவட்டாக சுற்றித் திரிகிறார்கள்.
காலை முதல் மாலை வரை கடும் வெயிலில் வேர்வை சிந்தி உழைத்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றும் பலருக்கு மத்தியில், உழைக்காமல் அடுத்தவரை மிரட்டி, உருட்டி தின்று கொழுத்து ஊர் சுற்றும் ஒரு கூட்டமும் திரிகிறது. ‘இவர்கள் போலீசாருக்கும் பயப்படுவதில்லை’. ‘நாங்க என்ன செய்யுறதுன்னே தெரியல’ எங்களை போன்ற சிறு வணிகர்கள் இவர்களால் தவிக்கிறோம்’ என சிறு குறு வியாபாரிகளும் வணிகர்களும் புலம்பித் தள்ளுகிறார்கள். எனவே இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து காவல்துறை எங்களுக்கு நிரந்தர பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நாம் இது தொடர்பாக சாயல்குடி போலீசாரிடம் பேச்சு கொடுத்தோம், அவர்கள்’ கடந்த ஜனவரி மாதம் புரோட்டா கடை உரிமையாளரை தாக்கிய ரவுடி கும்பலில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் மூன்று பேரை சிறையில் அடைத்து விட்டோம். மேலும், அதன் தொடர்ச்சியாக அந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் மீது குண்டாஸ் வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கிராமங்கள் நிறைந்துள்ளது. கிராமங்களில் இருந்து மது குடிப்பதற்காக இங்கு வரும் இளைஞர்கள் போதையில் கடைகாரர்களிடம் வம்பிழுத்து விடுகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி யின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இரவு நேர ரோந்து பணியையும் தீவிர படுத்தியுள்ளோம். பொது மக்களுக்கும் வணிகர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கிறோம் என தெரிவித்தனர்.
Published at : 14 Mar 2024 01:37 PM (IST)
மேலும் காண