Governor RN Ravi Says 35 Crore People Have Been Lifted Out Of Poverty By The Government Led By PM Modi – TNN | இந்த மக்கள் ஓலை குடிசை வீட்டில் வாழ்ந்து வருவது துயரத்தில் ஆழ்த்தி உள்ளது

“பிரதமர் மோடி தலைமையிலான அரசால் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர். மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. ஆனால் அவைகள் முறையாக வந்து இங்கு சேரவில்லை” என நாகையில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றினார். 
 
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தார். கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணிக்கு வந்த ஆளுநர் அங்கு கடந்த 1968-ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டடிப்பட்டு உயிர் பிழைத்த தியாகி பழனிவேலை சந்தித்தார். பின்னர் தமிழ் சேவா சங்கம் –  சார்பாக தமிழர் திருவிழா – கிராமப்புற பொருளாதார மேம்பாடு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வீடு வழங்குதல் மற்றும் மீனவர் மேம்பாட்டு திட்டம் நிகழ்ச்சி பொராவாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார். தொடர்ந்து புதிய வீடு கட்டி முடிக்கப்பட்டதற்கான சாவியையும், பெண்களுக்கான தையல் எந்திரம் வழங்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார். 
 
தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி பேசும்போது:-
 
தமிழ் சேவா சங்கம்  பொருளாதாரத்தின் பின் தன்கியவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல், மகளிருக்கு தையல் எந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த பணிகள் தொடர வேண்டும். நான் இன்று  பல கிராமங்களுக்கு சென்றேன். பூர்வகுடி மக்களையும், மீனவர்களை சந்தித்தேன். அவர்களுடைய ஏழ்மை நிலை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலை மாற வேண்டும். நமது நாடு உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதாரத்தில் வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம். தமிழ்நாடும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இருந்தபோதிலும்  இங்கு இருக்கக்கூடிய ஏழ்மை நிலையை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது. கீழ்வென்மணி கிராமத்துக்கு சென்று அங்கு தியாகி பழனிவேலை சந்தித்து உரையாடினேன். 55 வருடங்களுக்கு முன்பு நடந்த துயரமான சம்பவம் இன்னும் அங்கு நிழலாடிக் கொண்டு இருக்கிறது.
நமது மாநில தனி மனித வருமானம் ரூ. 2.75 லட்சம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ளவர்களின் ஆண்டு வருமானம் ரூ.40 ஆயிரமாகத்தான் இருக்கும் ? என்ற கேள்வி எழுகிறது.

 
நம் நாடு சுதந்திரம் அடைந்த பொழுது குறைந்த காலத்தில் நமது ஏழ்மை ஒழிந்து விடும் என்று நம்பினோம். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களும் இதைத்தான் நினைத்தார்கள். ஆனால் தற்போது வரை பல பகுதிகள் ஏழ்மையில் தத்தளித்துக் கொண்டு தான் இருக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தின் படி நாம் அனைவருக்கும் சமூக நீதியையும், பொருளாதாரத்தையும் கொடுக்க வேண்டும் என்று தான் நம்புகிறோம். ஆனால் நடைமுறைகள் வேறு மாதிரி இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின் சிலர் பணக்காரர்கள் ஆகினர், சிலர் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகினர், சிலர் ஏழ்மையை பற்றி பேசி, பேசியே பணக்காரர்கள் ஆகினர். தற்போதுள்ள ஏழ்மையை கொண்டு ஒருபோதும் வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க முடியாது. நமது நாடு உலக அளவில் புதிய அவதாரத்தை எடுத்து உள்ளது. புதிய கோட்பாட்டின்படி மனிதர்கள் அனைவரையும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பயணிக்கின்றோம். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் அதன் நோக்கம். மத்தியில் உள்ள தலைமை இதை நோக்கியே வீரநடை போட்டு வருகிறது.  இந்த புதிய பாரத அவதாரத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர்.
 
நான் இங்குள்ள கிராமங்களை சென்று பார்க்கும் போது, மத்திய அரசின் பல திட்டங்கள் முறையாக வந்து சேர்ந்திருக்கிறதா ? என்கிற சந்தேகம் எழுந்து உள்ளது. அவர்கள் வீடு என்கிற பெயரில் ஒன்றுக்கும் உதவாத ஓலை குடிசை வீட்டில் வாழ்ந்து வருவது துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. மத்திய அரசாங்கமும் கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. ஆனால் அவைகள் முறையாக வந்து இங்கு சேரவில்லை. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இங்கு உள்ள பூர்வகுடி மக்களின் பங்களிப்பும், மீனவர்களின் பங்களிப்பும் முக்கியத்துவமாக உள்ளது. அப்படிப்பட்ட பங்களிப்புடன், இருந்தால் நமது நாட்டை 25 ஆண்டுகளில் நாம் முன்னேறிய நாடாக மாற்றிவிடலாம். நான் பல்வேறு கிராமங்களுக்கு சென்றேன். திறமை மிக்க இளைஞர்களை கண்டேன். அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அவர்கள் தங்களது தகுதியாலும் திறமையாலும் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் என்று நம்புகிறேன். 

 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் பொழுது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களை நம் நாட்டின் முன்னேற்றத்தின் சிற்பிகளாக உருவாக்கும் பணியை ஸ்ரீதர் வேம்பு திறமையாக செய்து வருகிறார். அரசியலால் நாம் பிரச்னைகளையும், பிரிவைவும் மட்டுமே செய்ய முடியும். ஆனால் சேவை செய்யக்கூடிய நல்ல உள்ளங்கள், அமைப்புகள் மூலம் தான் நமது நாட்டை முன்னேற்ற முடியும். அந்த சேவையை தமிழ் சேவா சங்கம் திறமையாக செய்து வருகிறது. இளைஞர்களின் புதிய கனவுகளுடன் புதிய தமிழ்நாட்டை படைப்போம் என்றார்.
 
இந்த விழாவில் சோகோ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, தமிழ் சேவா சங்க நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஞானசரவணவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

Source link