Easter pilgrims: தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
45 பேர் பலியான சோகம்:
மாமட்லகலா அருகே உள்ள பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புகளின் மீது மோதி பாலத்தின் மீது இருந்து கவிழ்ந்து கீழே இருந்த பள்ளத்தில் சரிந்தது. தொடர்ந்து, தரையில் மோதிய வேகத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. 165 அடி உயர பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிருஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிரிடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்:
முதற்கட்ட விசாரணையில், போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக அந்த பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்துள்ளது. தென்னாப்ரிக்கா நாட்டின் மிகப்பெரிய சர்ச்களில் ஒன்றான சியோன் கிறிஸ்டியன் சர்ச்சின் தலைமையகமான மோரியாவிற்கு, அவர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது. தென்னாப்பிரிக்கர்கள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் பொது விடுமுறையுடன் நான்கு நாட்கள் வார இறுதிக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த சோகம் ஏற்பட்டது.
https://t.co/vcCx2WqwN78-Year-Old Survives Bus Plunge Off Bridge That Left 45 People Dead.The bus, which was carrying people from Botswana to an Easter weekend pilgrimage in South Africa, fell 165 feet into a ravine.
— SNN (@STONENNEWS) March 29, 2024
மீட்பு பணிகள் தீவிரம்:
விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, விபத்திற்கு தென்னாப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொடரும் விபத்துகள்:
உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகிலேயே அதிக சாலை இறப்பு விகிதங்களில் ஆப்பிரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது.
2022ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் மட்டும் 12 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட சாலை இறப்புகள் நிகழ்ந்துள்ளன. தென்னாப்பிரிக்காவின் ஆட்டோமொபைல் அசோசியேஷன் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் போக்குவரத்து இறப்புகளை “தேசிய நெருக்கடி” என்று குறிப்பிட்டுள்ளது. சாலை பாதுகாப்பில் அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும், போக்குவரத்து சட்டங்களை சிறப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த சங்கம் வலியுறுத்தி வருகிறது. மேலும், “இந்த இரண்டு பிரச்சனைகளும் தீர்க்கப்படாவிட்டால், நமது நாட்டின் மோசமான சாலை பாதுகாப்பு நிலைமை ஒருபோதும் மேம்படாது” என்று தென்னாப்பிரிக்காவின் ஆட்டோமொபைல் அசோசியேஷன் எச்சரித்துள்ளது.
மேலும் காண